Monday, August 4, 2014

திருவல்லிக்கேணி திவ்ய தேஸ சிறப்புகள்

106 திவ்ய தேஸங்களும் ஒவ்வொன்றும் பல விதங்களில் சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்கள் ஈரச் சொற்களாலும், ரிஷிகளாலும், ஆச்சாரியர்களாலும் மேலும் சிறப்பிக்கப் பட்டு பொலிவுடன் விளங்குகின்றன.

இவற்றில் திருவல்லிக்கேணி திவ்ய தேஸம் பற்றி பலருக்குத் தெரிந்திருந்தாலும் , அறியாத மற்றவர்களுக்காக , அடியேன் அறிவுக்கு எட்டிய வரையில் தெரிந்த விஷயங்களை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.

திருவல்லிக்கேணி - இப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நம் உடலிலும் மனத்திலும் ஒரு சிலிர்ப்பு உண்டாகும். பேருவகை தானாகப் பெருகி வரும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதற் காரணம்  இத்திருக்கோயிலில் ஏள்ளியிருக்கும் அனைத்து எம்பெருமான்களும் ஆழ்வார்களால் மங்களாஸாஸனம்
செய்யப்பெற்றவர்கள். ( ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, ஸ்ரீ ராமர், ஸ்ரீ கஜேந்திர வரதர்  ஆகியோர் திருமங்கை ஆழ்வாராலும், ஸ்ரீ மன்னாதன், திருமழிசை ஆழ்வாராலும் ).

அது மட்டுமல்ல. இத்திருக்கொயிலில் எழுந்த்தருளியிருக்கும் எம்பெருமான்களை ஸேவிப்பதன் மூலம் நாம் மற்ற ஐந்து திவ்ய தேஸ எம்பெருமான்களை ஒரே இடத்தில் ஸேவித்த பாக்யம் கிடைக்கும்.
திருவரங்கத்திலே எழுந்தருளி அனைவருக்கும் கடாக்ஷம் கொடுக்கும் பெரிய பெருமாளும் , நம் பெருமாளும் இங்கு ஸ்ரீ மன்னாதனாகவும், திருமலை ஸ்ரீ வேங்கடேசன் இங்கு ஸ்ரீ வேங்கட க்ருஷ்ணனாகவும், காஞ்சிபுரத்திலே எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவப் பெருமாள் இவ்விடத்திலே கஜேந்திர வரதனாகவும், அஹோபிலம் ஸ்ரீ நரசிம்மர் , தெள்ளியஸிங்கராகவும், அயோத்தியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராமர், இங்கே ஸ்ரீ ராமபிரானாகவும் எழுந்தருளியுள்ளனர்.

இரண்டாவது காரணம் இத்திருக்கோயில் திவ்யப் ப்ரபந்த கோஷ்டி.  தமிழகத்தின் பல சிறப்பு மிக்க ஊர்களில் இருந்து தங்கள் தொழில் நிமித்தமாக சென்னை வந்து இங்கு திருவல்லிக்கேணியில் குடியேறியவர்கள். எம்பெருமான்களுக்கு கைங்கர்யம் செய்யும் விதமாக இத்திவ்ய ப்ரபந்த கோஷ்டியில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மிகுந்த ஞானஸ்தர்கள். அவர்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அனுசந்திக்கும் பொழுது நம் செவிகளுக்கு மிக ஆனந்தமாக இருக்கும்.
புறக் கண்களால் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தறுளியிருக்கும் பெருமாளை ஸேவித்துக் கொண்டே, அருளிச் செயல் கோஷ்டியினரின் அமுதவாய் சொற்களைக் செவி வழியே கேட்டும், அப்படியே அகக் கண்களால் ஆழ்வார்களின்  அருளிச்செயல் வார்த்தைகளில் வர்ணிக்கப்பட்ட எம்பெருமான்களின் சிறப்புகளை அனுபவித்துக் கொண்டும் இருக்கலாம்.

உற்சவ காலங்களில் குறிப்பாக ஸ்ரீ. பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி ப்ரம்மோற்சவங்களின் பொழுது உற்சவ மூர்த்தியின் இரு வேளை திருவீதி புறப்பாட்டின் பொழுது சங்கமிக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களின் அருளிச் செயல் கோஷ்டியானது வேறு எங்கும் காணக் கிடைக்காதது. அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

மூன்றாவதாக சென்னையின் மிக முக்கிய கேந்திரங்களில் திருவல்லிக்கேணியும் ஒன்றாகையால் , இத் திருத்தலத்திற்கு வருவது மிகவும் எளிது. இத்திருத்தலத்தின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணியின்  வடக்குப் பகுதியான திருவல்லிக்கேணி  பேருந்து நிருத்தத்திலிருந்தும், தெற்குப் பகுதியான விவேகானந்தர் பேருந்து நிருத்தத்திலிருந்தும், சற்றே சிறிது தொலைவில்  கிழக்குப் பகுதியான  கண்ணகி சிலை பேருந்து நிருத்தத்திலிருந்தும் சென்னையின் அநேக பகுதிகளுக்கும் பேருந்து தொடர்பு வசதி உள்ளது. மேலும் சமீப வருடங்களாக  MRTS  மின்சார ரயில் தொடர்பும் உள்ளதாகையால் இத் திவ்ய தேஸத்திற்கு வந்து தரிசித்துவிட்டு செல்வது வெகு எளிது.

நான்காவதாக ஸப்த ரிஷிகளாகிய ப்ருகு, மரிஷீ, அத்ரி, மார்க்கண்டேயர், சுமதி, சப்தரோமர், ஜபாலி இவர்களுக்கு இத் திருக்கோயில் எம்பருமான்கள் பல் வேறு காலங்களில் காட்சி அளித்து அருள் பாலித்துள்ளார்கள்.

ஐந்தாவதாகவும் மிக முக்கியமானதாகவும் வருடம் முழுவதும் சில நாட்களைத் தவிர்த்து ஏதாவது ஒரு உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

இரண்டு மாட வீதிகள் - ஒன்று பெரிய மாட வீதி - இது தெற்கு மாடவீதி, தொளசிங்கப் பெருமாள் கோயில் வீதி, சிங்கராச்சாரியர் வீதி, தேரடி வீதி, மற்றும் மூன்று குளக்கரை வீதிகள். இவ் வீதிகளில் எல்லா உற்சவங்களின் போதும், அமாவாசை, ஏகாதசி நாட்களிலும் புறப்பாடு நடக்கும். மற்ற சிறிய வீதிகள் - தெற்கு மாட வீதி, தொளசிங்கப் பெருமாள் வீதியின் சிறிய பகுதி, பேயாழ்வார் கோயில் வீதிகள் மட்டுமே. இவ் வீதிகளில் எம்பெருமான்களின் மாத திருநக்ஷத்திரங்கள், ரோஹிணி, தமிழ் மாத தொடக்க புறப்பாடுகள் நடக்கும்.

இத்திருக்கோயிலில் நடைபெரும் சில முக்கிய உற்சவங்கள் :-

சித்திரை மாதம் ஸ்ரீ பார்த்த சாரதி ஸ்வாமி ப்ரம்மோற்சவம்.
சித்திரை மாதம் ஸ்ரீ எம்பெருமானார் உற்சவம்.
வைகாசி மாதம் வசந்த உற்சவம் மற்றும் கோடை உற்சவம்.
வைகாசி மாதம் கஜேந்திர வரதர் உற்சவம்.
ஆனி மாதம் ஸ்ரீ தெள்ளியஸிங்கர் ஸ்வாமி ப்ரம்மோற்சவம்.
ஆடி மாதம் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம்.
ஆவணி மாதம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி பவித்திர உற்சவம்.
புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது ஸ்ரீ.வேதவல்லித் தாயார் உற்சவம்.
ஐப்பசி மாதம் ஸ்ரீ.மணவாள மாமுனிகள் உற்சவம்.
மார்கழி மாதம் 21 நாட்கள் நடைபெறும் அத்யயன உற்சவம். (அதில் பகல் பத்தின் போது கோவிலுக்குள் உள் புறப்பாடும், இராப்பத்தின் போது பெரிய வீதி புறப்பாடும் ந்டக்கும் ).
தை மாதம் ஸ்ரீ.ஆண்டாள் நீராட்ட உற்சவம்.
மாசி மாதம் அமாவாசையன்று தொடங்கி ஏழு நாட்களுக்கு தெப்பொற்சவம் - ஒவ்வொரு பெருமாளுக்கும். முதல் மூன்று நாள்கள் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கும் அதன் பின் தெள்ளியஸிங்கர், ஸ்ரீமன்னாதன், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கஜேந்திர வரதர் ஆகியோருக்கும் நடைபெரும்.
மாசி, பங்குனி மாதங்களில் ஐந்து பெருமாளுக்கும் , வேதவல்லித் தாயாருக்கும் தவன உற்சவம்.
பங்குனி மாதம் ஸ்ரீ.ராமர் உற்சவம்.
பங்குனி மாதம் ஸ்ரீ மன்னாதன் உற்சவம்.
இவை தவிர ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்டருளும் திருப்பாவாடை உற்சவம், ஈக்காட்டுத் தாங்கல் எழுந்தருளல் , மாசி மகம் ஸமுத்திரக் கரையில் தீர்த்தவாரி என்று மேலும் பல உற்சவங்கள் உண்டு.

எல்லா எம்பெருமான்களுக்கும் ஜ்யேஷ்டாபிஷேகம் மிக விமரிசையாக நடக்கும்.

இது தவிர ஆழ்வார், ஆச்சார்யர்களின் வருஷ உற்சவங்களில் சாற்றுமுறையின் பொழுது புறப்பாடு. ஆழ்வார் , ஆச்சாரியர்களின் மாத திருநக்ஷத்திரங்களின் போது கோவிலுக்குள் அந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த குறிப்பிட்ட பாசுரங்களுடன் கோஷ்டியாகி, தீர்த்த , ப்ரஸாத வினியோகம் நடைபெறும்.


இனி இந்த திவ்ய தேஸத்தின் ஐந்து எம்பெருமான்கள்  பற்றி:- 

 
1) ருக்மணி ஸமேத ஸ்ரீ வேங்கட க்ருஷ்ணன் மூலவர். உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி. 

2) யோகா நரசிம்மர் மூலவர். உற்சவர் ஸ்ரீ தெள்ளிய ஸிங்கர்.

3) வேதவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ மன்னாதன்.

4) சக்ரவர்த்தித் திருமகனாகிய ஸ்ரீ ராமர், ஸீதா பிராட்டியார் மற்றும் லக்ஷ்மணருடன். 

5) கஜேந்திர வரதர். 
 


இத்திருக்கோயிலில் முதன்முதலில் எழுந்தருளிய பெருமான் ஸ்ரீ மன்னாதன் , அடுத்து ஸ்ரீ தெள்ளிய ஸிங்கர், பிறகு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி. அதன் பின் ஸ்ரீ ராமர், ஸ்ரீ கஜேந்திர வரதர்.

இத்திருக்கோயிலின் ப்ரதான பெருமாள் மூலவர் ஸ்ரீ வேங்கட க்ருஷ்ணன், உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி.
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்டருளும் உற்சவங்களும் அவற்றின் சிறப்புகளும் :-

சித்திரை மாதம் ப்ரம்மோற்சவம் :-

ஒவ்வொரு நாளும் காலை, இரவு இரண்டு வேளையும் புறப்பாடு பெரிய மாட வீதியில் நடக்கும். வீதி புறப்பாட்டில் முதல் நாள் காலையில் இயற்பா தொடக்கமாகவும், இரவில் பெரியாழ்வார் திருமொழி தொடக்கமாகவும் முதல் ஆறு நாள் உற்சவங்களில் முதல் ஆயிரமும், மூன்றாம் ஆயிரமும் முடிக்கப் பெற்று, ஏழாம் நாள் காலை திருத்தேர் உற்சவத்தன்று காலை முதலில் திருவெழுக்கூற்றிருக்கையும், பிறகு பெரிய திருமொழி தொடங்கி ஒண்பதாம் நாள் இரவு புறப்பாட்டுடன் இதுவும் நிறைவு பெரும்.
தினசரி மாலை பெருமாள் பற்றி உலாத்தல் நடைபெற்று பிறகே வாஹன மண்டபத்திற்கு ஏள்ளுவார்.

பத்தாம் நாள்  காலை த்வாதஸ ஆராதனம் . அன்று நடக்கும் உற்சவத்தினைக் காண உண்மையில் கண் கோடி வேண்டும். அன்று காலை இத்திருக்கோயிலிலுள்ள எல்லா உற்சவ மூர்த்திகளும், ஆழ்வார் ஆச்சாரியர்களும் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்து அருளியிருப்பர். ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி நடு நாயகமாகவும், அவருக்கு வலது புறத்தில் வேதவல்லித் தாயாருடன் ஸ்ரீ மன்னாதனும், அதே திசையில் மற்றொரு இடத்தில் ஸ்ரீ ராமரும், பார்த்தசாரதிக்கு இடது புறத்தில் ஸ்ரீ தெள்ளிய ஸிங்கரும் அவருக்கு அருகில் கஜேந்திர வரதரும் எழுந்தருளியிருப்பர்.  இவ்வெல்லா எம்பெருமான்களையும் நோக்கியவாறு ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் எழுந்தருளியிருப்பர். முதலில் ஸ்ரீ பார்த்தசாரதிக்கும், பிறகு, வேதவல்லித் தாயாருடன் ஸ்ரீ மன்னாதனுக்கும், அடுத்து ஸ்ரீ தெள்ளிய ஸிங்கருக்கும் , ஸ்ரீ ராமருக்கும், ஸ்ரீ கஜேந்திர வரதருக்கும் திருமஞ்சனம் நடக்கும். பின் மூலவர்களுக்கும் திருமஞ்சனம் உண்டு.திருமஞ்சனம் முடிந்து எல்லாப் பெருமாளுக்கும் சாற்றுபடியாகி த்வாதச ஆராதனம் நடக்கும். மாலை கோவிலின் திருவாய்மொழி மண்டபத்தில் பெருமாள் வீற்றிருக்க சுமார் 2.00 மணியளவில் திருவாய்மொழி பாசுராங்கள் 1102 ம் ஸேவிக்கப் படும். அன்று இரவு வேட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் இராமானுச நூற்றந்தாதி அருளிச்செயல் கோஷ்டியுடன் வீதி புறப்பாடு நடக்கும். அத்துடன் ப்ரம்மோற்சவம் நிறைவு பெரும். பிறகு அடுத்த பத்து நாள்கள் விடையாற்றி உற்சவம் கோயிலுக்குள்ளேயே நடைபெறும். கடைசி நாளன்று பெருமாள் புஷ்பப் பல்லக்கில் வீதியில் எழுந்தருளுவார்.

திரு அத்யயன உற்சவம் :-

ப்ரம்மோற்சவத்தை அடுத்து மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றொரு உற்சவம் 21 நாட்கள் நடைபெரும் அத்யயன உற்சவம். இவ் உற்சவத்தில் பகல் பத்தின் போது பெருமாளின் ப்ரதான ஆஸ்தான மண்டபத்தில் பெருமாள் தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி, அவரின் இரண்டு பக்கமும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் எழுந்தருளியிருப்பர்.

மாலை சுமார் இரண்டு மணியளவில் ஆழ்வார்களுக்கு அருளப்பாடு ஆகி, கோஷ்டி தொடங்கும். முதல் ஐந்து நாட்களில் பெரியாழ்வார் திருமொழி தொடக்கமாகவும் கண்ணினுன் சிறுத்தாம்பு ஈடாகவும் முதலாயிரம் நிறைவுபெறும். ஆறாம் நாள் பெரிய திருமொழி தொடங்கி பத்தாம் நாள் திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகத்துடன் நிறைவுபெரும்.

இங்கு ஒரு முக்கியமான நிகழ்வை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆம். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று இரவு பெருமாள் புறப்பாடு முடிந்து அன்றைய கோஷ்டி சாற்றுமுறை, தீர்த்த , ப்ரசாத வினியோகம் ஆகி பெருமாள் ஸன்னதிக்குள் எழுந்தருளிய பிறகு மூலவர் எண்ணைக் காப்பு சாற்றப்பட்டு திரை சாத்தப்படும். அன்று இரவு முதல் பகல் பத்து ஆறாம் நாள் உற்சவத்தன்று வரை மூலவர் தரிசனம் கிடையாது.

எனவே மூலவர் தரிசனம் கிடைக்கப் பெறாமல் மிகுந்த ஏக்கத்துடன் இருக்கும் பக்தர்களுக்கு , பகல் பத்து ஆறாம் நாள் ஒரு பெரிய வரப் ப்ரசாதமாகும். அன்று தான் பெரிய திருமொழி கோஷ்டி தொடங்கப் பெற்று தொடர்ச்சியாக பாசுரங்கள் ஸேவிக்கப்படும். சரியாக இரண்டாம் பத்தின் இரண்டாம் திருமொழியாகிய " காசையாடை மூடியோடி " என்கிற திருவள்ளூர் வீரராகவப் பெருமாளுக்கு, மங்களாசாசனம் அருளப் பெற்ற பத்து பாசுரங்களும் ஸேவித்து முடிக்கப் பட்டவுடன் கோஷ்டி சிறிது நேரம் நிறுத்தப்படும். அப்பொழுது மூலவர் ஸன்னதி திறக்கப் பட்டு , மூலவருக்கு ஹாரத்தி ஆகி பின் திருவல்லிக்கேணி எம்பெருமான் மேல் மங்களாசாசனம் செய்யப் பெற்ற " விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் " பாசுரம் தொடங்கப்பெரும். அப்பொழுது ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானுக்கு அக்கோயிலின் விஷேஷ ப்ரசாதமான சர்க்கரைப் பொங்கல் அமுது செய்விக்கப்பட்டு பக்தர்கள் அனவைருக்கும் விநியோகிக்கப்படும். அன்று வேங்கட க்ருஷ்ணனை ஸேவிக்கும் பொழுது கிடைக்கும் ஒரு ஆனந்தமும் , மகிழ்ச்சியும் வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நேரில் வந்து அனுபவித்தால்தான் அந்த மகிமை நமக்குப் புரியும்.

தினசரி அருளிச் செயல் கோஷ்டி சாற்றுமுறையானவுடன் பெருமாள், கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளுவார். புறப்பாடு முடியும் பொழுது ஆஸ்தான மண்டபத்தின் முகப்பில் பத்திவுலாத்தல் நடைபெறும். விதவிதமான சாற்றுப்படிகளில் பெருமாள் பத்திஉலாத்தல் கண்டருளும்பொழுது அக் காட்சியினைக் காணவும், எம்பெருமானின் நடை அழகை ரசிப்பதற்காகவும் பெரும் திரள் பக்தர் கூட்டம் குவிந்திருக்கும். பத்தாம் நாளான பகல் பத்தின் கடைசி நாளன்று பெருமாள் மோஹினி அலங்கார திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பார்.

பதினோறாம் நாள் வைகுண்ட ஏகாதசி அன்று காலை திருவாய்மொழி முதல் திருமொழி தொடங்கப்படும். அன்று முதல் தினசரி இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய வீதி புறப்பாடு கண்டருளி பிறகு திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளுவார். வீதி புறப்பாட்டில் தினசரி உபதேசரத்னமாலை கோஷ்டியாகும். திருவாய்மொழி மண்டபத்தில் இரவு ஒவ்வொரு நாளும் திருவாய்மொழியின் ஒவ்வொரு பத்தும் ஸேவிக்கப்படும். இராப்பத்தின் பத்தாம் நாள் இரவு நம்மாழ்வார் திருவடி தொழல். எப்படி பகல் பத்தின் ஆறாம் நாள் உற்சவத்தின் போது நமக்கு ஓரு ஆனந்தம் ஏற்படுமோ அதுபோலவே இன்றும் இருக்கும். நம்மாழ்வார் திருவடி சேர்ந்து பின் அவர் எம்பெருமானால் நமக்கு மீண்டும் அருளப் பெற்றவுடன் , திருவாய்மொழியின் கடைசி திருமொழி அனுசந்திக்கப் பெற்று, சாற்றுமுறையாகி தீர்த்த, ப்ரசாத வினியோகத்துடன் இராப்பத்து உற்சவம் நிறைவு பெரும். அப்பொழுது இரவு 12.00 மணியைக் கடந்திருக்கும். அந்த இரவு நேரத்திலும் ஆயிரக்கணக்கில் ஸ்ரீவைஷ்ணவர்களும், பக்தர்களும் குவிந்திருந்து உற்சவத்தை மிகுந்த உற்சாகத்துடன் அனுபவிப்பர்.

மறுநாள் அதாவது 21 ஆம் நாளன்று இயற்பா - மாலை சுமார் 2.00 மணியளவில் கோஷ்டி தொடங்கி இரவு 9.00 மணியளவில் நிறைவடையும்.



ஆவணி மாதம் நடக்கும் பவித்ரோற்சவமும் சிறப்பு. ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி ஆண்டாள் ஸன்னதி எதிரில் உள்ள நீண்ட மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். முதல் நாள் திருவாய்மொழியின் மூன்று பத்துக்களும் , இரண்டாம் நாள் தொடங்கி ஆறாம் நாள் முடிய ஒவ்வொரு பத்தும் , கடைசி நாளான ஏழாம் நாளன்று 9ஆம் பத்தும் 10 ஆம் பத்தும் கோஷ்டியாகும். இரவு சுமார் 9.30 மணியளவில் சாற்றுமுறையுடன் பூர்ணாஹூதி நிறைவுபெரும்.

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியை திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் மூன்றாம் திருமொழியில் பல பாசுரங்களில் மங்களாஸாஸனம் செய்துள்ளார் - முதல் பாசுரமான

"விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ  * செற்றவன் தன்னை புரமெரி
செய்த * சிவனுறு துயர் களை தேவை * பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு * பார்த்தன் தன் தேர் முன் நின்றானை * சிற்றவை பணியால் முடி துறந்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே *

தொடங்கி ஆறு பாசுரங்கள் வரையிலும், பேயாழ்வார் தனது மூன்றாம் திருவந்தாதியின் பதினாறாவது பாசுரமான

"வந்துதைத்த வெண்திரைகள்  * செம்பவள வெண்முத்தம் * அந்தி விளக்கும் அணிவிளக்காம் *
 எந்தை ஒருவல்லித் தாமரையாள்  * ஒன்றிய சீர் மார்வன் * திருவல்லிக்கேணியான் சென்று * "

என்ற பாசுரத்திலும் மங்களாஸாஸனம் செய்தருளியுள்ளனர்.


தெள்ளியஸிங்கர் சிறப்புகளும் உற்சவங்களும் :-

மூலவர் யோகா நரசிம்மராகக் காட்சியருளுகிறார். உற்சவர் தெள்ளியஸிங்கர் தனது இடது கரத்தினால் பக்தர்களை அழைத்து அபயமளித்து அருள்பாலிக்கிறார். அழகன். இந்த அழகனை நாள் முழுதும் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். எவ்வளவு நேரம் தரிசித்தாலும் நம் மனம் அவனை விட்டகல ஒருபொழுதும் எண்ணாது. அவர் ஒரு சிறந்த வரப் ப்ரசாதி.

இப்பெருமாளிடம் விவேகானந்தர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் இப்பெருமாளுடன் கடிதப் போக்குவரத்தும் நடத்தியுள்ளார்.

தெள்ளியஸிங்கர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். இவருக்கு தனி த்வஜஸ்தம்பம் உண்டு. இவருக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானைப் போலவே பத்து நாள்கள்  கொடியேற்றத்துடன்  ப்ரம்மோற்சவம் உண்டு. ஆனி மாதத்தில் நடக்கும் இப்ப்ரம்மோற்சவத்தின் போது பெருமாள் இரண்டு வேளையும் பல்வேறு வாஹனங்களில் வீதி புறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூன்றாம் நாள் கருட ஸேவை இவர் ஸன்னதி அமைந்திருக்கும் தெள்ளியஸிங்கர் பெருமாள் வீதியில் கோபுர வாசல் தரிசனம் காலை சுமார் 5.30 மணியளவில் கிடைக்கும். இவரின் ப்ரம்மோற்சவத்தின் மற்றுமொரு சிறப்பு ஐந்தாம் நாள் உற்சவதன்று மாலை 3.00 மணியளவில் கோயிலுக்குள் உற்சவர் யோகாநரசிம்மர் சாற்றுப்படியில் எழுந்தருளி அனைவருக்கும் காட்சி கொடுப்பார்.
























திருமங்கை ஆழ்வார்  மங்களாஸாஸனம் - திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியின் இரண்டாம் பத்தின் மூன்றாம் திருமொழியில் எட்டாம் பாசுரமான

பள்ளியில் ஓதிவந்ததன் சிறுவன்  * வாயில் ஒராயிர நாமம் * ஒள்ளியவாகிப் போத ஆங்கதனுக்கு * ஒன்றுமோர் பொருப்பிலனாகி * பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்பத்
 * பிறை எயிற்று அனல்
விழிப் பேழ்வாய் * தெள்ளிய ஸிங்கமாகிய தேவைத் * திருவல்லிக்கேணி கண்டேனே *

என்று தெள்ளியஸிங்கரை மங்களாஸாஸனம் அருளியுள்ளார்.


ஸ்ரீ மன்னாதன் ஸ்ரீ வேதவல்லித் தாயார் சிறப்பும் ஊற்சவங்களும் :-

ப்ருகு மஹரிஷியின் மகளாக அவதரித்த ஸ்ரீ வேதவல்லித் தாயாரை ஸ்ரீ மன்னாதன் மணமுடித்து இத்திருக்கோயிலில் எழுந்தருளி அம்மஹரிஷிக்கு காட்சி அருளினார். இவரைப் பற்றி திருமழிசை ஆழ்வார் தன் நான்முகன் திருவந்தாதியில் அருளிச் செய்துள்ளார்.


மூலவர் கிடந்த திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார். வேதவல்லித் தாயாருக்கு தனி ஸன்னதி. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்தர நக்ஷத்திரத்தன்று பெருமாள், தாயார் கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அன்று கத்யத்ர கோஷ்டியும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பெருமாளின் திருநக்ஷத்திரமான ரேவதி அன்று ஸ்ரீ மன்னாதன் சிறிய மாடவீதி புறப்பாடு கண்டருளுவார். தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் மங்களா ஸாஸனமான " திருமாலை " ப்ரபந்தம் அன்று அருளிச் செயல் கோஷ்டியாரால் ஸேவிக்கப்படும். அதே போல் வேறு உற்சவங்கள் இல்லாத நாள்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தாயார் , சிறிய திருமடல் கோஷ்டியுடன் உள் புறப்பாடு கண்டருளுவார். நவராத்திரியின் பொழுது தாயாருக்கு லக்ஷார்ச்சனை நடக்கும். மாலையில் சிறிய வாஹனங்களில் உள் புறப்பாடு நடக்கும். அப்பொழுது தினசரி சிறிய திருமடல் அருளிச்செயல் கோஷ்டியும் உண்டு.  மேலும் சாதாரண நாளில் வெள்ளிக்கிழமையும், ரேவதி நக்ஷத்திரமும் சேர்ந்து ஒரே நாளில் அமைந்துவிட்டால் அதுவும் ஒரு சிறப்புதான். ஸ்ரீ மன்னாதன் சிறிய வீதி கண்டருளிய பின் கோயிலுக்குள் தாயாருடன் சேர்ந்து சேர்த்தி ஸேவை. இருவரும் உள்புறப்பாடு, சிறிய திருமடல் கோஷ்டியுடன்.

இப்பெருமாளைப் பற்றி திருமழிசை ஆழ்வார் தனது நான்முகன் திருவந்தாதியின் 35 வது பாசுரத்தில்
" தாளால் உலகம் * அளந்த அசைவே கொல் * வாளாக் கிடக்கும் வாய் திறவான் * நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை * மாவல்லிக்கேணியான் * ஐந்தலை வாய் நாகத்தணை *
 என்று மங்களாஸாஸனம் செய்துள்ளார்.


ஸ்ரீ ராமர் உற்சவம் :-

இவருக்கு பங்குனி மாதம் ஓன்பது நாட்கள் உற்சவம் நடைபெரும். தினசரி ஒருவேளை புறப்பாடு கண்டருளுவார். மூன்றாம் நாள் கருட ஸேவை அன்று மட்டும் காலையில் புறப்பாடு. மற்ற நாள்களில் மாலை வேலையில். இப்பெருமாள் ஒவ்வொரு நாள் உற்சவத்தின் போதும் தவன உற்சவ பங்களாவிற்குள் எழுந்தருளுவார். இவ்வுற்சவத்தின் போது ஒருநாள் மட்டும் காலை முதற்கொண்டு தவன உற்சவ பங்களாவில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி மாலை வீதி புறப்பாடு நடைபெரும். கடைசி நாள் உற்சவமான ஸ்ரீ ராம நவமி அன்று ஸ்ரீ ராமர் சிறிய திருவடியான ஹனுமந்த வாஹனத்தில் எழுந்தருளுவார். அன்று வீதியில் பெருமாள் திருமொழி  அருளிச் செயல் கோஷ்டி.




பெரிய திருமொழியின் இரண்டாம் பத்தில் மூன்றாம் திருமொழியில் ஏழாம் பாசுரமாக திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ராமரை மங்களாஸாஸனம் அருளியுள்ளார். அந்தப் பாசுரம் :-

" பரதனும் தம்பி சத்ருக்கனனும் * இலக்குமனோடு மைதிலியும் * இரவும் நன்பகலும் துதி செய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை * குரவமே கமழும் குளிர் பொழிலூடு * குயிலோடு மயில்கள் நின்றால * இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் * திருவல்லிக்கேணி கண்டேனே "


 ஸ்ரீ கஜேந்திர வரதர் உற்சவம் :-

இவருக்கு காஞ்சிபுரத்தில் தேவப் பெருமாளுக்கு ப்ரம்மோறசவம் நடைபெரும் அதே நாள்களில் இங்கும் இவருக்கும்  ஓன்பது நாள்கநடைபெரும். ஸ்ரீ ராமரை போன்றே ஒருவேளை புறப்பாடு. மூன்றாம் நாள் காலை கருட ஸேவை.






 
 
ஸ்ரீ ஆண்டாள் உற்சவம் - 
 
ஸ்ரீ கோதை நாச்சியாருக்கு ஆடி மாதம் அவர் அவதரித்த திருவாடிப்பூரம் உற்சவம் பத்து நாள்களும், மார்கழி மாதம் நீராட்டஉற்சவமும் நடைபெரும்.  திருக்கோயிலுக்கு அருகில் திருத்தேர் எதிரில் உள்ள நீராட்ட மண்டபத்தில் தினசரி ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடைபெரும்.தை கனு அன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெரும். நீராட்ட உற்சவத்தின் போது ஆழ்வார்கள் , ஆச்சாரியர்கள் சார்பாக விருந்தும் நடக்கும்.  திருக்கல்யாணம்  முடிந்த  பிறகு  ஆண்டாள் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியுடன் அவர் ஸன்னதியிலேயே எழுந்தருளியிருப்பார். ஆடிப்பூர உற்சவத்தின் போது ஊஞ்சல் ஸேவை தினசரி நடக்கும்.  மாலை கோயிலில்  திருவாய்மொழி  கோஷ்டியாகும். 
 
 
 
 ஸ்வாமி எம்பெருமானார் உற்சவம் :-
 
எம்பெருமானார் அவதாரமே ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளின் அனுக்ரஹத்தினால்தான் என்பதினால் இத்திருக்கோயிலில் ஸ்வாமி எம்பெருமானார் உற்சவம் சிறப்பாக நடைபெரும். சித்திரை மாதம் ஸ்வாமியின் அவதார உற்சவம் மிகப் பாங்குடன் பத்து நாள்கள் காலை மாலை இரண்டு வேளையும் புறப்பாடுடன்  அருளிச்செயல் கோஷ்டியுடன் நடைபெரும். எப்படி ஸ்ரீ பார்த்தசாரதி ,
 ஸ்ரீ நரசிம்மர்  ப்ரமோற்சவங்களின் போது திவ்யப் ப்ரபந்த பாசுரங்கள் அனைத்தும் ஸேவிக்கப் படுமோ அதுபோல் எம்பெருமானார் உற்சவத்தின் போதும் நாலாயிரம் அனுசந்திக்கப்படும். எம்பெருமானார் சாற்றுமுறையன்று ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியுடன் புறப்பாடு நடக்கும். சாற்றுமுறை முடிய இரவு 11.00 மணி ஆகிவிடும்.
 

 
 ஸ்வாமி மணவாள மாமுனிகள் உற்சவம் :-
 
ஐப்பசி மாதம் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருமூல அவதார உற்சமும் மிகச் சிறப்பாக நடைபெரும். தினசரி ஒரு வேளை புறப்பாடு நடக்கும். எல்லா பெருமாள் , தாயார் ஸன்னதிகளில் ஸ்வாமியின் மங்களாஸாஸனம் நடக்கும். கடைசி நாளன்று ஸ்வாமி மங்களா ஸாஸனம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி ஸன்னதியில் விடியற்காலை சுமார் 5.30 மணியளவில் நடக்கும். அப்பொழுது ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் கைத்தல ஸேவை நடைபெரும். ஆஹா என்ன அழகான ஒரு அற்புதமான ஸேவை. பெருமாள் திருக்கோயில் பட்டர்களின் கைகளில் ஏள்ளியிருந்து மெல்ல மெல்ல அசைந்து அசைந்து ஆடிவரும் அந்த அழகினையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இருந்து அனுபவிக்க வேண்டும். இது நம் வாழ் நாளின் ஒரு மிகப் பெரிய கொடுப்பினையாகவே அடியேன் நினைக்கிறேன்.
 
 
 மேற்படி உற்சவங்களைத் தவிர வருடத்திற்கு ஒருமுறை தான் மங்களாஸாஸனம் அருளிய பெருமாளை நேரில் வந்து மங்களாஸாஸனம் செய்வதற்காக பேயாழ்வார் தனது அவதார ஸ்தலமான திருமயிலையிலிருந்து ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி ஸன்னதிக்கு எழுந்தருளி , ஒவ்வொரு ஸன்னதியிலும் மங்களாஸாஸனம் முடிந்து அன்று மாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுடன் திருவல்லிகேணி பெரிய மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளுவார்.
 
 
 
 
 
திருமயிலை ஆதி கேஸவப் பெருமாளும் வருடத்திற்கு ஒருமுறை ஆடி மாதத்தில் வனபோஜன உற்சவத்தின் ஒரு நாளில் திருவல்லிக்கேணியில் ஸ்ரீ வானமாமலை மடத்தில் எழுந்தருளி,  திருமஞ்சனம்,  மற்றும்  ஸேவை சாற்றுமுறைகள் கண்டருளி, இரவதிருவல்லிக்கேணி மாட வீதிகளில் புறப்பாடு கண்டு பின் ஆஸ்தானம் ஏள்ளுவார்.
 
 
 
மேற்படி இரண்டு உற்சவங்களையும் ஸ்ரீமான். என்.சி.ஸ்ரீதரன் அவர்களின் பெருமுயற்சியாலும், அவரின் மேற்பார்வையிலும் சிறப்பாக நடைபெரும். திருவல்லிக்கேணி வாசிகளுக்கு இது மேலும் ஒரு கொடுப்பினை.
 
இப்படியாக வருடம் முழுவதும் கோலாகலத்துடன் பல உற்சவங்கள் நடைபெரும் இந்த திவ்ய தேஸத்தினில் வாழ்வதற்கும் இங்குள்ள எம்பெருமான்களை  தினசரி  ஸேவிப்பதற்கும்  யாருக்குத்தான் விருப்பமிருக்காது.
 
அதனால் தானோ  என்னவோ  பல பெருமக்கள் திருவல்லிக்கேணியை தங்கள் வாசஸ்தலமாகக் கொண்டுள்ளனர். மேலும் ஒய்வு பெற்ற பல ஸ்ரீவைஷ்ணவர்களின்  விருப்ப ஓய்விடமாக இருக்கும் ஒரு சில திவ்ய தேஸங்களில் திருவ்ல்லிக்கேணி , ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து அல்லது இணையாக இருப்பது கண்கூடு.
 
 
அடியேன் ஒரு சிறிய முயற்சியாக திருவல்லிக்கேணி திவ்யதேஸத்தைப் பற்றி இங்கு பதிவிட்டுள்ளேன். குற்றம் குறையிருப்பின் மன்னிக்கவும்