Tuesday, February 16, 2016

திருக்கச்சி நம்பிகள் வைபவம்

திருக்கச்சி நம்பிகள் 1004 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகாமையில் உள்ள , பூவிருந்தவல்லியில் அவதரித்தவர் ஆவர். இவர் மாசி மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்திலே, " ஸேனை முதலியார் " அம்சமாக, வைஸ்ய குலத்தில்  அவதரித்து, பார்கவப்பிரியர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.

திருக்கச்சி நம்பிகளுக்கு பல  சிறப்புகள் உண்டு. முதலில் , ஸ்ரீ.திருமழிசைப் பிரானின் ஆக்ஜைப்படி, திருவல்லிக்கேணி எம்பெருமானுக்கு , புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார். பின் காஞ்சி நகரத்திலே எழுந்தருளியுள்ள ஸ்ரீ. தேவப் பெருமாளுக்கு , திருவாலவட்ட கைங்கர்யங்கள் செய்து வந்தார். மேலும் தேவப் பெருமாளுடன் , அத்யந்தமாக பேசக் கூடிய அருளையும் இவருக்கு தேவப் பெருமாள் அருளியிருந்தார்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த திருக்கச்சி நம்பிகளுக்கும், இளையாழ்வாராக அவதரித்து,, பின் உடையவராகி, நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தழைத்தோங்கச் செய்த ஸ்வாமி.எம்பெருமானாருக்கும் மிக்க நெருங்கிய தொடர்பு உண்டு. இதற்குக் காரணம் இளையாழ்வார் இப்பூவுலகிலே அவதரிப்பதற்கு முன்பே, அவர் குடும்பத்தை சார்ந்தவரும், எம்பெருமானாரின் , மாமாவும் ( இளையாழ்வாரின் , தாயாரின் சகோதரர் ) ஆன ஸ்ரீ.பெரிய திருமலை நம்பியுடன், இவர் , இளம் வயது முதலே நட்புடன் , பாசம் காட்டி அத்யந்தமாக பழகி  வந்தனர். மேலும் எம்பெருமானாரின் தந்தையாகிய ஆசூரி. ஸ்ரீ.கேஸவ சோமாயாஜியுடனும் அன்பு கொண்டிருந்தவர்.

திருமணமாகி பல காலமாகியும், கேஸவ சோமாயாஜிக்கு , குழந்தை பேறு கிடைக்கவில்லை. இதன் காரணமாக , திருக்கச்சி நம்பிகள் மூலம், கேஸவ சோமாயாஜிக்கு, குழந்தை பாக்கியம் வேண்டி, ஸ்ரீ.தேவப் பெருமாளிடம் , யாசிக்க , அவரும் திருவல்லிக்கேணி சென்று , அங்குள்ள கைரவிணி புஷ்கரணியில், புத்ரகாமேஷ்டி யாகம் நடந்தசொல்லி அருள்பாலித்தார்.
அங்கு நடத்தப்பட புத்ரகாமேஷ்டி யாகத்தின் பலனாக , ஆதிசேஷன் அம்சமாக இளையாழ்வார் அவதரித்தார். அந்த யாகம் நடக்கும் பொழுது கூடவே இருந்து உதவிகள் செய்தவர் திருக்கச்சி நம்பிகள். இப்படி எம்பெருமானார் அவதரிப்புக்கு காரணகர்த்தராக இருந்த திருக்கச்சி நம்பிகள், அவருடன் நல்ல தொடர்பில், அன்புடன் இருந்தார்.


நாலாயிர திவ்யப்ப்ரபந்தம் இவ்வுலகத்தினர் அனைவருக்கும் கிடைக்க காரணமாயிருந்த ஸ்ரீ.நாதமுனிகள், தம்மிடம் இருந்த பவிஷ்யாதாரரின் விக்ரஹத்தை ,பிற்காலத்தில் தனது பேரனாக அவதரிக்கப் போகும் ஸ்ரீ.ஆளவந்தாரிடம் கொடுக்கச் சொல்லி, தனது சிஷ்யரான உய்யக்கொண்டாரிடம் கொடுக்க , அவர் தமது சிஷ்யரான மணக்கால் நம்பியிடம் கொடுக்க, அவர் அதனை ஆளவந்தாரிடம் ஸேர்ப்பித்தார். 

திருவரங்கத்திலே, ஸ்ரீ.ஆளவந்தார், ஸ்ரீ.ரங்கனாதனுக்கு திவ்யப்ப்ரபந்த ஸேவைகளையும், காலக்ஷேபங்களும் செய்து கொண்டு, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை மேலும் வளர்ச்சி அடைய வைத்திருந்தார்.தம்மிடம் அளிக்கப்பட்ட பவிஷ்யாதாரரின் விக்ரஹத்தை ஆராதித்துவந்த அவர், ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்து , தெவப் பெருமாளை ஸேவிக்க திருக்கோயிலுக்க்ச் சென்றார். அங்கு அவரை வரவேற்ற திருக்கச்சிநம்பிகள், அவருக்கு, பெருமாள் ஸேவை ஆனவுடன் அங்கு வந்திருந்த இளையாழ்வாரை, அறிமுகப்படுத்தி வைத்தார். அவரைக் கண்டவுடன், தான் ஆராதிக்கும், பவிஷ்யாதாரரின் விக்ரஹம் , இவரைப் போல் இருப்பதைக் கண்டு " ஆமுதல்வன் இவன் " என்று நிச்சயித்துக் கொண்டு, இளையாழ்வாரை , திருவரங்கனுக்கு கைங்கர்யங்கள் செய்ய விண்ணப்பித்தார்.


 இளையாழ்வார், தேவப் பெருமாளுக்கு, திருக்கச்சிநம்பிகளின் உபதேசப்படி , திருமஞ்சன கைங்கர்யங்கள் செய்து வந்தார். அதன் பிறகு திருவரங்கம் சென்ற இளையாழ்வார், அங்கு ஆளவந்தாரை, சந்திப்பதற்கு முன்பே, பரமபதித்துவிட்டதை அறிந்து , மிக்க துயருற்று, மீண்டும் காஞ்சிபுரம் திரும்பி, தேவப்பெருமாளுக்கு, திருமஞ்சன கைங்கர்யங்கள் செய்வதை , திருக்கச்சிநம்பிகளின் உபதேஸப்படி தொடர்ந்தார் . திருக்கச்சிநம்பிகளுக்கு, எம்பெருமானாரிடம் , எம்பெருமானாருக்கு, திருக்கச்சிநம்பிகளிடமும் மிக்க பரிவும், பாசமும் உண்டு. ஒரு நாள், எம்பெருமானார், திருக்கச்சிநம்பிகளிடம், தம்மை, அவரின் சிஷ்யராக ஏற்க வேண்ட,  ஆனால் திருக்கச்சிநம்பிகளோ, இளையாழ்வாரின் இந்த வேண்டுதல் , வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானது என்று கூறி, மறுதளித்துவிட்டார்.

இருந்தாலும், தம் மனத்தளவில், திருக்கச்சிநம்பிகளை, தமது ஆச்சாரியராக வரித்துக் கொண்ட , எம்பெருமானார், தமது அகத்தில், அமுதுண்ண அழைத்தார். இதற்குக் காரணம் பாகவத ஸேஷம். ஆம். திருக்கச்சிநம்பிகள் உணவருந்திய இலையிலேயே, தாமும் அமுதுண்ண இளையாழ்வார் விரும்பியதே. திருக்கச்சிநம்பிகள் விருந்துக்கு தம் அகத்திற்கு வர ஒப்புக் கொண்டதை, தமது மனைவி, தஞ்சமாம்பாளிடம் தெரிவித்து,  உணவினை தயார் செய்த பிறகு, பெருமாளுக்கு அமுது செய்துவிட்டு, திருக்கச்சிநம்பிகளை அவரின், அகத்திலிருந்து அழைத்துவர சென்றார்.  திருக்கச்சிநம்பிகளோ, வேறொரு வழியில், இளையாழ்வாரின் இல்லத்திற்கு வந்து, அங்கு இளையாழ்வார் இல்லாததை அறிந்து, தாம் அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால், தமக்கு உடனே, விருந்து அளிக்க வேண்ட, தஞ்சமாம்பாளும், அவருக்கு உணவிட்ட பின், அவர் புறப்பட்ட பிறகு, அவர் சாப்பிட்ட இலையை ஒரு கோலால் வெளியில் தள்ளி, அந்த இடத்தினை சுத்தி செய்தார்.

திருக்கச்சிநம்பிகளை அழைத்துவரச் சென்ற இளையாழ்வார், அவரின் திருமடத்தில், அவர் இல்லாததைக் கண்டு, மீண்டும்தம் அகம் திரும்பினர். அப்பொழுது அவர் மனைவி, திருக்கச்சிநம்பிகள் அங்கு வந்ததையும், அவசர நிமித்தம் காரணமாக விரைவில் அமுதுண்டு விட்டு சென்று விட்டதாகவும், அவர் தாழ்ந்த வருணத்தை சேர்ந்தவராகையால் அவர் சாப்பிட்ட இலையை, கோலால் வெளியில்தள்ளிவிட்டு, அந்த இடத்தை சாணத்தால் சுத்தி செய்ததாகவும்   சொல்ல, இதனைக் கேட்ட எம்பெருமானார், தாம் ஆச்சாரியராக ஆஸ்ரயிக்கும் , திருக்கச்சிநம்பிகளின்ன் பாகவத சேஷம் தமக்குக் கிடைக்கவில்லையே என்று மிக்க துயரமுற்றார். அந்த அளவிற்கு, திருக்கச்சிநம்பிகளிடம் ஈடுபாடு கொண்டிருந்தார் எம்பெருமானார்.


எம்பெருமானாருக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய விஷயமாக பல சந்தேகங்கள் எழும்ப, அவற்றுக்கு தக்க விடை கிடைக்க வேண்டி, திருக்கச்சிநம்பிகளிடம் சென்று, அவரை தேவப் பெருமாளிடம் கேட்டு, அருளம்படி விண்ணப்பித்தார். திருக்கச்சிநம்பிகளும் தேவப் பெருமாளிடம் கேட்டு, இளையாழ்வாரின் சந்தேகங்களை நீக்கும் விதமாக கீழ்க் கண்ட ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்:-

1) நாமே பரம் பொருள்

2) ஆன்மா- பரமாத்மா வேறுபாடு உடையதே- சித்தாந்தம்

3) மோக்ஷத்திற்கு சிறந்த உபாயம் , ப்ரபத்தியே,

4) அந்திமஸ்ருதி வேண்டியதில்லை.

5) சரீர முடிவில் மோக்ஷம் உண்டு.

6) பெரிய நம்பிகளையே ஆச்சாரியனாகக் கொள்ளவும்.


எம்பெருமானார் துறவறம் மேற்கொண்டு, தேவப் பெருமாளின் அனுமதி பெற்று , திருவரங்கம் செல்லும் பொழுது, அவரை வழியனுப்பி வைத்தவர் திருக்கச்சிநம்பிகளே.


திருக்கச்சிநம்பிகள் தேவப் பெருமாளிடம் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவராகையால் , அவரிடம் இருந்து ஏழு உபதேஸங்களைப் பெற்றார். அவை:-

1) கருடத்யானம் - இதன் மூலம் வேதங்களின் சாரங்களை தெரிந்து கொள்ளலாம்.

2) பாகவத சேஷத்வம் - பகவத் கைங்கர்யத்தை விட பாகவத கைங்கர்யம் மூலம் எளிதில் பேறு பெறலாம்.

3) ஸ்வப்ரயத்நஹாநி - தன் முயற்சியின் மூலம் பகவத் க்ருபையை அடைய முடியாது. பாரதந்திரியம் என்னும் பகவத் கடாக்ஷத்தின் மூலமே பகவத் க்ருபையை பெற முடியும்.

4) வைஷ்ணவ சமபுத்திஹாநி - ஸ்ரீவைஷ்ணவர்களை, தமக்கு சமமாக எண்ணாது, உயர்ந்தவர்களாக கருத வேண்டும்

5) ஜாதி பேத அபசாரம் -  ஸ்ரீவைஷ்ணவர்களை ஜாதியை காட்டி, உயர்வு, தாழ்வு பார்ப்பது அபசாரமாகும்.

6) வைஷ்ணவ சகவாஸம் - நல்ல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் சகவாஸாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

7) வைஷ்ணவ ஜலபானம் -  ஸ்ரீவைஷ்னவர்களுடைய திருவடி தீர்த்தத்தை. ஏற்று ஸ்வீகரிக்க வேண்டும்.


மானுட பிறவி எடுக்கும் சனி தோஷம் , ஏழரை வருடம் பிடிக்குமாதலால், திருக்கச்சிநம்பிகளுக்கும் சனி பிடித்தது, ஆனால் தேவப் பெருமாள் க்ருபையினால் அது ஏழரை நாழிகையாக அவருக்குக் குறைக்கப்பட்டு, அதன் காரணமாக, அவர் கைங்கர்யம் பார்த்துக் கொண்டிருந்த  காலத்தில் , பெருமாளின் ரத்ன மாலை காணாமல் போக, அதற்கு அவர்தான் காரணம் என்று கூறி, அதிகாரிகள் , அவரை சிறையிலடைத்தனர். ஆனால் ஏழரை நாழிகளுக்குள், அந்த ரத்ன மாலை கிடைக்கப் பெற்ற காரணத்தினால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப் பெற்றார்.


திருக்கச்சிநம்பிகளின் அவதார சிறப்புக்கு ஒரு சான்று -
 திருக்கச்சிநம்பிகள், வேகவதி ஆற்றில் நீராடிவிட்டு திரும்பும் பொழுது, அவரின் திருவடிபட்ட இடங்களில் இருந்த மண்ணை எடுத்து , ஒரு தாழ்ந்த குலத்தில் பிறந்தவன், தன் தலையில் இட்டுக் கொண்டான். அதன் காரணமாக அவனுக்கு பரமபதம் கிடைத்ததென்பதை அறிந்து கொள்ளும் போது ,  திருக்கச்சிநம்பிகளுக்கு எவ்வளவு சிறப்பான அனுக்ரஹத்தை எம்பெருமான் அளித்துள்ளான் என்பது புரியும்.

திருக்கச்சிநம்பிகள் , ஒரு சமயம்,  தனக்கு பரமபதம் எப்பொழுது கிட்டும் என்று, தேவப்பெருமாளிடம் கேட்க, அவரோ "உமக்கு பரமபதம் கிடையாது " என்று கூற, அதைக் கேட்ட, நம்பிகள், எம்பெருமானிடம் " நாம் உமக்கு ஆலவட்டம் வீசி, கைங்கர்யம் செய்தேனே, ஏன் எனக்கு பரமபத ப்ராப்தி இல்லை எங்கிறீர்  " என்று  பெருமாளிடம் கேட்க, அவரும் " நீர், வீசினதற்கு, நாம் உம்மிடம் பேசினோம். ஆக, வீசியதற்கு, பேசியது சரியாகப் போய் விட்டது. மேலும் நீர், ஆச்சார்ய கைங்கர்யம் செய்யாத காரணத்தினால், உமக்கு பரமபத ப்ராப்தி கிடையாது. உமக்கு பரமபத ப்ராப்தி கிடைக்க வேண்டுமென்றால், முதலில் ஆச்சார்ய கைங்கர்யம் செய்து வாரும் " என்று சொல்லி அனுப்பினார்.


ஆச்சார்ய கைங்கர்யம் செய்தால்தான், பரமபதம் கிட்டும் என்ற நிலையில், திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று , ஆச்சார்ய கைங்கர்யம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் தன் சுய உருவில் சென்றால், அவரிடம் கைங்கர்ய ப்ராப்தி கிடைக்காது என்று எண்ணி,  ஒரு மாடு மேய்ப்பவனாக வேடமிட்டுக் கொண்டு, அவரிடம் சேர்ந்து , ஆச்சார்ய கைகர்யம் செய்து வந்தார். பின் வெறொரு சமயத்தில், திருக்கோட்டியூர் நம்பி , இவர்  யார் என்று தெரிந்து கொண்டு, அவரிடம், " இப்படி செய்யலாமா"  என்று கேட்க, அவரும் சற்று நாணத்துடன் நடந்த சம்பவங்களைக் கூற , திருக்கோட்டியூர் நம்பியும், திருக்கச்சிநம்பிகளை  ஆசிர்வதித்து, காஞ்சிக்கு திருப்பி அனுப்பினார்.

மேலே ஒரு பகுதியில் சொன்னபடி, காஞ்சிபுரத்தில், தேவப் பெருமாளுக்கு, திருமஞ்சன கைங்கர்யங்கள் செய்து வந்த, ஸ்வாமி.எம்பெருமானார், யாதவப் ப்ரகாசரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மூன்றாவது முறையாக , திருக்கச்சிநம்பிகள் மூலமாக மீண்டும் தேவப் பெருமாளுக்கு, திருமஞ்சன கைங்கர்யம் செய்துவந்து , பின் துறவறம் மேற்கொண்டுவிட்டார். இவர் பிரிந்த நிலையில், யாதவப் ப்ரகாசரின், பெருமை குறைந்த நிலையில் மிகுந்த துயரங்களுக்கு அவர் ஆளானார். இதனை கண்ணுற்ற யாதவப் ப்ரகாசரின் தாயார், மிகுந்த வருத்தமுற்று, தேவப் பெருமாளுக்கு , ஆலவட்டம் கைங்கர்யம் செய்வதுடன், அவருடன் பேசும் வல்லமை பெற்றவராக இருந்த திருக்கச்சிநம்பிகளிடம் சென்று, அவரை சரி செய்ய கேட்க, அவரும், தேவப் பெருமாளிடம் சென்று, நம்பிகள் சரியாவதற்கு உண்டான பரிகாரங்களை கேட்டு தெரிந்து கொண்டு, அதன்படி, யாதவப் ப்ரகாசரை, எம்பெருமானாரிடம் சென்று,  அவரிடம் ஆஸ்ரயிக்கும்படி சொல்ல, அவரும் அவ்வாறே செய்து, துறவறத்தை மேற்கொண்டு,  இராமாநுஜர் இட்ட திருநாமமான " கோவிந்த ஜீயர் " என்ற பட்டத்துடன் , இராமாநுஜரின் விருப்பத்திற்கிணங்க, " யதிதர்ம சமுச்சயம் " என்ற நூலை  எழுதி, அதில் சன்யாசிகளின் தர்மங்களை நியமித்தார்.

திருக்கச்சிநம்பிகள்  " தேவராஜ அஷ்டகம் " என்று எட்டு அற்புத ஸ்லோகங்களை அருளிச்செய்தார். அவைகளைத்தாம்,  தம் சிஷ்யர்களுக்கு, சமாஸ்ரயணத்தின் போது, ஆச்சாரியர்கள்  அனுசந்தித்து உபதேசிகிறார்கள்.


இப்பூவுலகிலே ஐம்பத்து  ஐந்து ஆண்டுகள் ஜீவித்த , திருக்கச்சிநம்பிகள், ஆளவந்தாரை , நினைத்துக் கொண்டே பர்மபதம் எய்தினார்

இப்படியாக நம் ஆச்சாரிய புருஷர்களில் மிகச்  சிறப்பு வாய்ந்தவராக வாழ்ந்து , பரமபதத்தை அடைந்த திருக்கச்சிநம்பிகளின் , இந்த அவதார தினத்தில் அவரின் பாதம்பணிவோமாக.

நன்றி, தாஸன் - நெ.வி.ராகவன்.

பின் குறிப்பு - மேற்படி திருக்கச்சிநம்பிகளின் சரித்திர விவரங்களை இங்கு பதிவிடுவதற்கு , அடியேன் " ஆச்சாயர்கள் வைபவ சுருக்கம் " என்று, நாங்குநேரி.ஸ்ரீ.கி.அப்பாழ்வார் அருளிச்செய்த   நூலில் இருந்து பல குறிப்புக்கள்  எடுத்துக் கொண்டென் அவருக்கு அடியேனின் நன்றி.


























.