நவராத்திரியும் சென்னை சௌகார்பேட்டை வாசிகளாக இருந்த நாங்களும் - மலரும் நினைவுகள்.
நவராத்திரி - இது பெண்களுக்கான ஒன்பது நாள்கள் திருவிழா என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இந்த நவராத்திரி எங்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான - இன்பமான நாள்களாக இருந்தன என்றால் அது மிகையில்லை. அதற்கான காரணங்களை கீழே விவரிக்கின்றேன்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் நம் பாரத தேஸத்தின் பல மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரியும் ஒன்று. பலர் இல்லங்களில் கொலு வைத்து, விதம் விதமாக அலங்கரித்து இருப்பார்கள். மேலும் பெண்கள் பல வண்ண உடைகளை அணிந்து கொண்டு தங்கள் வீடுகளுக்கு மற்றவர்களையும் அழைப்பார்கள். தங்கள் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு நல்ல முறையில் வரவேற்பு கொடுத்து அவர்கள் வியக்கும் வண்ணம் தங்கள் வீட்டில் அமைத்துள்ள கொலுவின் பெருமையினை மற்றவர்களுக்கு விவரித்து மகிழ்ச்சி கொள்வார்கள்.
நவராத்திரியின் போது மற்றொரு விஷேஷம் - தினமும் ஒவ்வொரு வகையான சுண்டல் தயாரித்து வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பார்கள். ஆனால் பல இல்லங்களிலும் தினசரி சுண்டல் எல்லோருக்கும் வினியோகிப்பதால் பலர் இந்த காலங்களில் சுண்டலைக் கண்டாலே ஒடிவிடுவர்.
சரி , இப்பொழுது நான் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். நவராத்திரி என்றாலே அதை மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுபவர்கள் குஜராத்திகளும், மராத்தியர்களும், ராஜஸ்தானிகளும் தான். இவர்கள் அனைவரும் பெருமளவில் ஒன்று சேர்ந்து குடியிருக்கும் இடம் சென்னை சௌகார்பேட்டை பகுதியில்தான். இன்னும் சொல்லப் போனால் ஒரு காலத்தில் பெருவாரியாக தமிழர்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இப்பொழுது அனேகமாக இவர்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். ஆக்கிரமித்திக் கொண்டுள்ளார்கள் என்றால் அடாவடியாக அல்ல . விலை கொடுத்து நியாயமான முறையில் வாங்கித்தான். இப்பகுதிக்கு சென்றால் அங்கு பெரும்பாலும் பேசப்படும் மொழியாக இருப்பது தமிழல்லாத மற்ற மொழிகளான ஹிந்தியும், குஜராத்தியும், மராத்தி மொழியும்தான். அவர்கள் பொதுவாகவே முதலாளிகளாக இருப்பதால் தங்கள் வசம் உள்ள பெருமளவு பணத்தைக் கொண்டு இப் பகுதியின் பல வீடுகளை வாங்கிவிட்டு, ஒரு பகுதியில் தாங்கள் வாழ்ந்து கொண்டும் , மற்ற பகுதிகளில் தங்கள் தொழிலை நடத்திக் கொண்டும் இருக்கின்றனர்.
நவராத்திரியின் பொது இந்த குஜராத்திகளின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது. அப்படி கொண்டாடுவார்கள். ஒன்பது நாள் இரவுகளும் ஒரே குதூகலம்தான். இரவு 9.00 மணிக்கு மேல் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்த பிறகு ஒவ்வொரு குஜாராத்தியின் வீடுகளிலிருந்து பெண்கள் பெருமளவில் வீதிகளில் திரள்வார்கள். மேலே சொன்னது போல் விதம் விதமான அலங்காரமான வண்ண வண்ண உடைகளை அணிந்து கொண்டு வருவார்கள்.
அந்த சௌகார்பேட்டை பகுதியில் குறிப்பிட்ட மூன்று அல்லது நான்கு இடங்களில் கூடுவார்கள். ஒன்று தங்க சாலை தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள பகுதி, மற்றொன்று லுக்முதாஸ் தெரு, அடுத்தது இதே தங்க சாலையின் மற்றொரு பகுதி.
சிறிது சிறிதாகக் கூடும் இந்த குஜராத்திகள் பல வயதினர். சிறு குழந்தைகள் முதற் கொண்டு எழுபது வயது முதியவர் வரை பலரும் கலந்து கொள்வர். இவர்கள் கூடுவது குஜராத்திகளின் மிகப் பிரபலமான " தாண்டியா " எனப்படும் நடனம் ஆடுவதற்காக. சுமார் 9.30 மணியளவில் ஆரம்பிக்கும் இந்த நடனம் முடிவதற்கு இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும்.
இந்த விழாக்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும், பொது வீதியில் நடக்கும் இந்த " தாண்டியா " நடனங்களைக் காண நானும், எனது பல நண்பர்களும் தயாராகிவிடுவோம். இரவு 9.00 மணிக்கு அந்த குஜராத்திகள் நடனம் ஆடுவதற்கு வருகிறார்களொ இல்லையோ நாங்கள் தயாராக அந்த இடத்திற்கு சென்றுவிடுவோம். ஒரு இடத்தில் மட்டும் நில்லாமல் எந்தப் பகுதிகளில் எங்கெங்கெல்லாம் நடனம் நடக்கும் இடங்களுக்கு சென்று வருவோம். ஒரே இடத்தில் இல்லாமல் மீண்டும், மீண்டும் சுழற்சி முறையில் நண்பர்கள் பிரிந்து
சென்று பார்த்து, ரசித்து மகிழ்வோம். ஒரு சில இடங்களில் சிறப்பான முறையில் வெகு ரசனையுடன் நடக்கும் நடனங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பிற நண்பர்கள் வேறு இடத்தில் இருக்கும் மற்ற நண்பர்களை அந்த இடத்திற்கு வரும்படி நேரில் வந்து அழைத்துச் செல்வர்.
இப்படி மிக அழகாகவும், அருமையாகவும் நடக்கும் இந்த விழாவானது முடியும் தருவாயை அடையும் பொழுது , நாங்கள் மிக வருத்தம் அடைவோம் என்றால் அது உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை.
நான் குறிப்பிட்ட இந்த நிகழ்வுகளெல்லாம் நடந்த காலம் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு. இப்பொழுது அவ்வளவு கோலாகலத்துடன் அங்கு இந்த நவராத்திரி விழா நடக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அப்பகுதியிலிருந்து நான் மட்டுமல்லாது எனது எல்லா நண்பர்களும் வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து சென்றுவிட்டோம்.
மேலும் அந்தக் குறிப்பிட்ட காலமானது நாங்கள் யாவரும் கட்டுக் காவலின்றி இளம் வயது வாலிபர்களாக இருந்த காலம். எங்களுக்கு
படிப்பதைத் ( ?) தவிர வேறு எந்த நிர்பந்தமும் கிடையாது. கவலையில்லாத வாலிபர்களாக வாழ்ந்த காலம். இளமையின் ஆயுட் காலத்தை மிக அருமையாக அனுபவித்த நானும் எனது பல நண்பர்களும் இந்த குஜராத்திகளின் நவராத்திரியினையும் , அவர்களின் உல்லாச ஆட்ட பாட்டங்களையும் என்றும் மறக்க முடியாததாகையால் இன்று என்னுடைய " மலரும் நினைவுகளாக " இதனை இங்கே பதிவிடுகின்றேன்.
No comments:
Post a Comment