Tuesday, February 3, 2015

திருமழிசை ஆழ்வார் வைபவம்

திருமழிசை ஆழ்வார் பற்றி அடியேன் மனைவி ஸ்ரீமதி.சந்திரா ராகவன் அவர்கள் தொகுத்துக் கொடுத்த பல குறிப்புகளுடன் அடியேனின் சிற்றறிவுக்கு கிட்டி, நினைவில் பதிந்திருந்த சில குறிப்புக்களையும்  இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வார்த்தைகளிலும், தகவல்களிலும் தவறிருந்தால் அடியோங்களை க்ஷமிக்க வேண்டுகிறோம்.


( புகைப்படம் உதவி - அந்தர்யாமி.நெட் )



திருமழிசையிலே, பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்ற அம்மையாருக்கும் , திருமகனாக , தை மாதம் மகம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்  பார்க்கவர் என்னும் பெயர் உடைய திருமழிசை ஆழ்வார்.இவர் பிறந்த பொழுது , இவரின் திரு உடம்பில் அவயவங்கள் இன்றி வெரும் பிண்டமாகப் பிறந்தார். எனவே இவரது பெற்றோர்கள் இவரை அவ்வூரிலே ஒரு வேலி ஓரமாகக் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.

எம்பெருமானின் கருணை கடாக்ஷத்தினால் இவருக்கு கைகள், கால்கள் மற்றும் எல்லா உறுப்புகளும் கிடைக்கப் பெற்றன. இப்படி முழு உருவம் பெற்று ஒரு அழகான குழந்தையாக எம்பெருமானால் மாற்றப்பட்ட இவர், யாரும் இல்லாத நிலையில் அந்த வேலியின் அருகில் கிடந்த நிலையில் அழுது கொண்டு இருந்தார். அப்பொழுது, அப்பக்கமாக வந்த பாணர்குலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், குழந்தையின் அழுகுரல் கேட்டு , அக் குழந்தையை சேர்ந்தவர்கள் அங்கு அருகில் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்து , ஒருவரும் இல்லாத பக்ஷத்தில் அக் குழந்தையை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அத்தம்பதியினர் குழந்தை பாக்கியம் அற்றவர்கள். எனவே வீதியின் ஓரத்தில் ஆதரவின்றி கிடக்கும் அக்குழந்தையை, தங்களுக்கு பகவான் அருளியதாக எண்ணி , மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லம் எடுத்துச் சென்றனர்.

இப்படியாக அப்பாணர் குலத்திலே வளர ஆரம்பித்த பார்க்கவர், தனக்கு உணவாக பாலைக் கூட பருகாமல், நன்கு வளர்ந்து வந்தார். இப்படி எந்த உணவும் உண்ணாமல் வளர்ந்து வந்த இந்த அதிசயக் குழந்தையைப் பார்த்து அவ்வூர் மக்கள் மிகுந்த அதிசயப்பட்டனர். பால் முதலான திரவ உணவுகளைக் கூட பருகாமல் வளர்ந்து வரும் குழந்தையை நினைத்து, பாணர்குல தம்பதியினர் மிக்க வருத்தமடைந்தனர்.


ஒரு வயோதிகத் தம்பதியினர், பாலைக் கூட பருகாமல் வளர்ந்து வரும் , குழந்தையைக் காண  வந்தனர். அப்பொழுது தங்களுடன் நன்கு காய்ச்சிய பாலை, குழந்தைக்குக் கொடுத்துப் பார்க்கலாம் என்று கொண்டுவந்தனர். என்ன அதிசயம். அவர்கள் கொடுத்த பாலை குழந்தை நன்றாகப் பருகியது. அது முதற்கொண்டு தினமும் அத்தம்பதியினர் குழந்தைக்குத் தாங்களாகவே பாலைக் கொண்டுவந்து கொடுத்து, பருக வைத்தனர்.

பின்னர் ஒரு நாள், குழந்தை குடித்தது போக மீதம் வைத்து இருந்த பாலை, அவருக்கு தினமும் பாலைக் கொண்டுவரும்  அந்த முதிய தம்பதியினர் பருகினர். வயது முதிர்ந்த அவர்கள் , மிகுந்திருந்த அந்தப் பாலைப் பருகியபொழுது, அவர்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு, திடீரென்று இளமை நிலைக்குத் திரும்பினர். இளமைப் பருவத்தை அடைந்த நிலையில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை கணிகண்ணன் என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.  கணிகண்ணனும், பார்க்கவருடன் கூட இருந்து, அவர் சிஷ்யராக அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்.

இப்படியாக வளர்ந்த நிலையில், பார்க்கவர் பல் வேறு சம்பிரதாயங்களில் மாறி, மாறி இருந்து வரலானார். இவரை திருத்தி , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் , முதலாழ்வார்களில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் விரும்பினார்.  அதற்கான முயற்சியாக , ஒரு சமயம் பார்க்கவர் கண் எதிரில் , பேயாழ்வார் ஒரு சிறிய செடியை கொண்டு வந்து, அதன் இலைப் பகுதி பூமிக்குள்ளும், வேர் பகுதி மேல் நோக்கியும் இருக்கும்படி நட்டார். மேலும் அவர் பார்க்கும் பொழுதே ஒரு அறுந்த கயிரை, ஒரு ஓட்டைப் பாணையில் கட்டி, தண்ணீர் இறைக்கலானார். இதனைக் கண்டு, பேயாழ்வாரிடம் வந்து , ஏன் இப்படி தவறாகச் செய்கின்றீர்கள் என்றும் இதனால் என்ன பயன் என்றும் பார்க்கவர் கேட்டார். அதற்கு பதில் கூறும் விதமாக , தான் செய்வது விழலுக்கு இறைத்த நீர் போன்றதுதான் என்றும் அது போலவே, பார்க்கவரும், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தழுவாமல், பிற மதங்களை சார்ந்து இருப்பதும் என்று கூற, இதனை உணர்ந்து கொண்ட பார்க்கவரும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு மாறினார். பின்னர் திருமழிசை ஆழ்வார் என்று அழைக்கபடலானார்.

வயதான மூதாட்டி ஒருவர், திருமழிசை ஆழ்வாரின் திருமாளிகையிலே தினமும் திருமாளிகையை பெருக்கி சுத்தம் செய்து, வெளியில் கோலமிட்டு கைங்கர்யங்கள் செய்து வந்தார். இவரின் கைங்கர்யங்களைக் கண்டு மகிழ்வுற்ற திருமழிசை ஆழ்வார் , அவரிடம் , அவருக்கு ஏதாவது உதவி செய்வதாகவும் ஆகவே என்ன உதவி வேண்டும் என்றும் கேட்க, அம்மூதாட்டி, தன்னால் இந்த முதுமையைத் தாங்க முடியவில்லை என்றும் அதற்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். அவருக்கு அவரின் முதுமையை நீக்கி, இளமை பருவத்தை அருளினார். மிக அழகான , வசீகரமான தோற்றமுடையவராகிய 
மாறிய அந்தப் பெண்னை, அப்பொழுது அப்பிரதேஸத்தை ஆண்டு வந்த மன்னன் விரும்பி மணந்து கொண்டான். காலம் செல்லச் செல்ல, அந்தப் பெண் தன் இளமை நிலையிலேயே இருக்க , அந்த அரசன் மட்டும் முதுமை நிலையை அடைந்தான். அவளின் நிரந்தரமான அந்த இளமை நிலைக்கு என்ன காரணம் என்று அவளிடம் கேட்க, அப் பெண்ணும், திருமழிசை ஆழ்வார் தனக்கு அந்த நிலையை அளித்ததாகக் கூறினாள். இதனை தெரிந்து கொண்ட அந்த அரசன் தனக்கும் அவ்வாறான இளமை நிலை வேண்டி, திருமழிசை ஆழ்வாரை அனுக விரும்பி, அவரின் சிஷ்யரான கணிகண்ணனிடம் சென்று, ஆழ்வாரிடம் சொல்லி, தனக்கும் இளமைப் பருவத்தை அளிக்க வேண்டினான். ஆனால் கணிகண்ணனோ அவ்வாறு செய்ய இயலாது என்று கூறி அரசனின் விருப்பத்தை நிராகரித்தார்.

தன்னை இளமை பருவத்திற்கு மாற்ற மறுத்த கணிகண்ணன் மேல் கோபம் கொண்ட அந்த அரசன், கணிகண்ணனை நாடு கடத்த ஆணையிட்டான். இதன் காரணமாக நாட்டை விட்டு கணிகண்ணன் வெளியேற, வருத்தமுற்ற திருமழிசைப் பிரான், நேராக தான் தினமும் ஸேவித்து வரும் திருவெக்கா, யதோத்தகாரி பெருமாளிடம் சென்று, கணிகண்ணன் இல்லாத ஊரில் தான் இருக்க விரும்பவில்லை என்றும், தானும் அவ்வூரை விட்டுச் செல்வதாகவும் , எனவே பெருமாளும் அவ்வூரில் இருக்க வேண்டாம் என்று வேண்டும் விதமாக,

 "கணிகண்ணன் போகின்றான், காமருபூம் கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா, துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றான், நீயும் உந்தன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் "

 என்று பாடி, தன்னுடன்  பெருமாளையும் கிளம்பி வரச் சொன்னார். பெருமாளும் அவரின் வாக்குக்கிணங்கி அவருடன் , காஞ்சி நகரத்தை விட்டு சென்றார். இதனால் செல்வத்தையும்,பொலிவையும் இழந்த அந்த பிரதேஸத்தைக் காண சகிக்காமல் தன்னுடைய தவறை உணர்ந்த அரசன், கணிகண்ணனை மீண்டும் காஞ்சி நகரத்திற்குத் திரும்ப வேண்டினான். கணிகண்ணனும் பக்திசாரரும் மீண்டும் காஞ்சிக்கு திரும்ப, அவர்களுடன் பெருமாளையும் வரச் சொல்லி,

" கணிகண்ணன் போக்கொழிந்தான், காமரு பூம் கச்சி மணிவண்ணா
நீ கிடக்கவேண்டும், துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன், நீயும் உந்தன் பைந்நாகப் பாய் படுத்துக் கொள் "

என்று வேண்ட பெருமாளும் , திருமழிசை ஆழ்வார் சொன்னபடியே மீண்டும் வந்து அவர் பைந்நாகப் பாயில் படுத்துக் கொண்டார். ஆனால் திரும்ப படுக்கும் போது திசை மாறி படுத்துக் கொண்டார். திருமழிசைப்பிரான் சொன்ன படி நடந்து கொண்டபடியினாலே, யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ஆனார். 

சிவன் ,திருமழிசை ஆழ்வாருக்கு, ஸ்ரீமன் நாராயணன் மேல் இருக்கும் பற்றை உலகுக்கு விழைக்க எண்ணம் கொண்டார். அதன் பொருட்டு அவரை சோதிப்பதற்காக , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் இருந்து அவரை மீண்டும் சைவ சமயத்திற்கு வர சிவன் அழைக்க , அதற்கு மறுத்த திருமழிசை ஆழ்வாருக்கும், சிவனுக்கும் வாக்கு வாதம் முற்ற, அதன் காரணமாக தனது நெற்றிக் கண்ணை திறந்து சிவன் ஆக்ரோஷத்துடன் அவரை எரிக்க முயன்றார். அப்பொழுது, திருமழிசை ஆழ்வார், தனது வலது பாதத்தின் கட்டை விரலில் உள்ள கண்ணை திறக்க, சிவனின் நெற்றிக் கண் ஜ்வாலை தனது வலிமையை இழந்தது. இதனைக் கண்ட சிவன் , திருமழிசை ஆழ்வாரின் ஸ்ரீவஷ்ணவ பக்தியை மெச்சி அவருக்கு பக்திசாரர் என்ற பெயரை அருளினார். இன்றும் இவரின் அவதார ஸ்தலமான திருமழிசையில், ஜெகன்னாதப் பெருமாள் திருக்கோயிலில் , இவரின் வலது கால் கட்டை விரலில் அந்த திருக்கண்னை காணலாம்.

திருமழிசை ஆழ்வார், திருக்குடந்தை ஆராவமுதனை ஸேவிக்க விரும்பி, திருக்குடந்தை செல்லும் வழியில், பெரும்புலியூர் என்ற இடத்தில் ஓய்வெடுக்க ஒரு இடத்தில் தங்கினார். அங்கு அப்பொழுது சில அந்தணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். வேற்று மனிதர் ஒருவர் வந்து அமர்ந்ததைக் கண்ட அந்த அந்தணர்கள் வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர். இதனை உணர்ந்து கொண்ட ஆழ்வாரும் அவ்விடத்தை விட்டு கிளம்ப, அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத விழைந்தனர். ஆனால் அவர்கள் எந்த இடத்தில் தாங்கள் நிறுத்திய வேத மந்திரத்தை தொடங்குவது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். இதனி கண்ட திருமழிசை ஆழ்வார், அவர்கள் தொடங்க வேண்டிய மந்திரத்தை உணர்த்த ஒரு விதையை எடுத்து அதனை உரித்து காண்பித்து, பூடகமாக எந்த இடத்தில் அவர்கள் வேத மந்திரத்தை தொடங்க வேண்டும் என்று சைகை காட்டினார். தங்கள் தவறினை புரிந்து கொண்ட அந்த அந்தணர்கள் , திருமழிசை ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு, அவரையும் வேத கோஷ்டியில் கலந்து கொள்ள வேண்டினர்.

பின்னர் திருக்குடந்தைக்குச் சென்று அங்கு ஸ்ரீ.ஆராவமுதனை சேவிக்கும் பொழுது, கிடந்த நிலையில் இருந்த பெருமாள் , எழுந்திருக்க முயலும் பொழுது, ஆழ்வார் அவரை அப்படியே இருக்க வேண்ட, பெருமாளும் , கிடந்த நிலையில் இல்லாமலும், எழுந்த நிலையிலும் இல்லாமல் , அப்படியே கிடந்திருந்து எழுந்த நிலையிலேயே ஆழ்வாருக்கு ஸேவை ஸாதித்தார். அவருக்கு ஸேவை ஸாதித்த நிலையிலேயே , திருக்குடந்தை ஆராவமுதன் இன்றும் எல்லோருக்கும் காட்சி அளிக்கிறார். இதனைப் பற்றி திருச்சந்தவிருத்தத்தில் இவர் அருளிய பாசுரம்

" நடந்த கால்கள் நொந்தவோ * நடுங்க ஞாலம் ஏனமாய் *
  இடந்த மெய் குலுங்கவோ * விலங்கு மால்வரைச் சுரம் *
  கடந்த கால் பரந்த * காவிரிக் கரை குடந்தையுள் *
  கிடந்தவாறு எழுந்திருந்து * பேசு வாழி கேசனே * ( பாசுரம் - 61 ).

திருமழிசை ஆழ்வார் பெரும்பாலும் யோக நிஷ்டையிலேயே ஆழ்ந்திருப்பார். அப்படி இருக்கும் சமயத்தில் , ஒரு மாயாவாதி அவரிடம் வந்து, எந்த ஒரு பொருளையும் தன்னிடம் கொடுத்தால், அதனை தான் தங்கமாக மாற்றித் தருவதாகக் கூற, அவனிடம், தன் காதில் உள்ள குறும்பை குடைந்தெடுத்து, அதை தங்கமாக மாற்றி அவனிடம் கொடுத்தார். இவரின் இந்த அற்புத சக்தி அளவிடற்கறியது.

ஸ்ரீமன் நாராயணனின் மேல் மிகுந்த பக்தியும் , ஈடுபாடும் கொண்டு, திருமழிசை ஆழ்வார், இரண்டு பிரபந்தங்களை இயற்றினார். 120 பாசுரங்களைக் கொண்ட திருச்சந்தவிருத்தமும், 96 பாசுரங்களைக் கொண்ட நான்முகன் திருவந்தாதியும் இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள். நான்முகன் திருவந்தாதியில் , இவர் இருந்த பல் வேறு சமயங்களைப் பற்றி குறிப்பிட்டு, ஸ்ரீமன் நாராயணனே எல்லோர்க்கும் தெய்வம் என்று அருளுகின்றார்.

இப்பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் திருமழிசை ஆழ்வார்.


( திருமழிசை ஆழ்வார், ஸ்ரீரங்கம், ஸ்ரீ பெரிய பெருமாள் திருக்கோயில் )


ஸ்வாமி மணவாள மாமுனிகள், தம் உபதேச ரத்னமாலையில், திருமழிசை ஆழவாரின் சிறப்பை ஒரு பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். " தையில் மகம் இன்று தாரணியில் ஏற்றம், இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன், துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாளென்று, நற்றவர்கள் கொண்டாடும் நாள் "
தை மாதம் மகம் நக்ஷத்திரத்திலே, திருமழிசை ஆழ்வார் அவதரித்த காரணத்தினாலே, இந்த தை மாத மகம் நக்ஷத்திரம் உலகத்திலேயே ஏற்றம் பெற்றது என்று குறிப்பிடுகின்றார்.

திருமழிசை ஆழ்வாரின் வாழி திருநாமம் :

" அன்புடன் அந்தாதி தொன்னூற்றாருரைத்தான் வாழியே *
  அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே *
  இன்பமிகு தையில் மகத்திங்கு உதித்தான் வாழியே *
 எழில் சந்தவிருத்தம் நூற்றிபது ஈந்தான் வாழியே *
 முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே *
 முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதர்ந்த சொல்லோன் வாழியே *
 நன் புவி நாலாயிரத்து எழுநூற்றிருந்தான் வாழியே *
 நங்கள் பத்திசாரர் இரு நற் பதங்கள் வாழியே * "


திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்.













 
 

No comments:

Post a Comment