Sunday, March 1, 2015

அன்ன கேஸவனாகிய ஸ்ரீ சென்ன கேஸவன்

சென்னை மாநகர் இன்று பரந்து விரிந்து கிடக்கும் ஒரு நகரம். பாரத தேஸத்தின் நான்காவது பெரிய நகரம். இன்று சென்னை மாநகரம்தான் தமிழ் நாட்டு மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமான ஒன்று.

இப்படிப்பட்ட இந்த சென்னை நகரத்திலே ஒரு காலத்தில் கடற்கரையை ஒட்டி இரண்டு  கோவில்கள் இருந்ததுவும் அவை இப்பொழுது என்ன ஆனது அல்லது எங்கிருக்கிறது என்பது இன்றைய மக்களில் பெரும்பான்மையோருக்குத்  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆன்மிக நகரமாக விளங்கிய சென்னை இன்று காலப் போக்கிலே தனது பொலிவை இழந்து ஆடம்பரமான நகரமாக சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வந்துள்ளது. இன்று நவ நாகரிகத்தின் உச்சியை அது இன்னும் தொடவில்லை என்றாலும் அதை நெருங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி. இந்த விஷயங்கள் இங்கு தேவையில்லை என்றாலும் எப்படி இருந்த ஊர் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை குறிப்பிடவே எழுதினேன்.

நிற்க, இன்று சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் கடற்கரைக்கு எதிர்ப் புறம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் ஒன்று. ஆங்கிலேயர்கள் சென்னையை தங்களது நகராக்கிக் கொண்ட பின்பு அவர்களுக்கு ஒரு கோட்டை , கொத்தளம் தேவைப்பட்டது. அதனை எங்கு அமைப்பது என்று அவர்கள் தீவிரமாக ஆலோசித்து, கடைசியாக கடற்கரைக்கு எதிரே உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். மிக அதிகமான நிலப்பரப்புள்ள அந்த இடம் ஆங்கிலேய அதிகாரிகள் அனைவருக்கும் பிடித்துப் போனது. எனவே அங்கு கோட்டையைக் கட்ட முடிவு செய்தனர், ஆனால் அவர்களுக்கு அந்த இடத்தில் இருந்த கோயில்களானது அவர்கள் கட்ட நினைத்திருக்கும் கோட்டைக்கு இடைஞ்சலாக இருந்தது. எனவே அவர்கள் அக் கோயில்களை இடித்துவிட்டு, அந்த இடத்திலேயே கட்டிடம் கட்ட முடிவு செய்தனர்.

இந்தச் செய்தியானது , அந்தக் காலத்திலே தமிழ்நாட்டின் பெருஞ் செல்வந்தர் குடும்பத்தில் ஒன்றாகிய மணலியார் குடும்பத்திற்கு தெரிந்ததும் மிகவும் பதறிவிட்டனர். எப்படியாவது அக் கோயில்களைக் காக்க உறுதி பூண்டனர், ஆன்மிகத்திலே மிகுந்த பற்றுக் கொண்ட அக்குடும்பத்தினர். மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்து ஆங்கிலேயர்களிடம் அக் கோவில்களை அப்படியே விட்டுவிட்டு அதனை அடுத்து உள்ள இடத்தில் கோட்டையை கட்டிக்கொள்ள வேண்டினர். இதற்கு சிறிதும் செவிமடுக்காத ஆங்கிலேயர்கள் அந்த இடத்திலுள்ள கோயிலை கண்டிப்பாக இடித்துவிடப் போவதாகக் கூறி அதனைப் பற்றி மேற்கொண்டு பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டனர். இதனால் மிகுந்த மன வருத்தமுற்ற அவர்கள் எப்படியாவது கோயில்களை மீட்டெடுக்க விழைந்தனர்.

அப்பொழுது அவர்களுக்கு தோன்றிய ஒரு எண்ணமானது தான் இப்பொழுது அடியேன் சொல்லப்போவது. மணலியார் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதன் படி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள அக் கோயில்களை , அதன் தூண்கள், மண்டபங்கள் உட்பட அனைத்தையும் , அப்படியே பெயர்த்து எடுத்துவந்து அவர்கள் செலவிலேயே வெறொரு இடத்திலே அதன் கட்டுமானம் கடற்கரை அருகிலே எப்படி இருந்ததோ, அப்படியே கட்டுவது என்பதுதான் அந்த முடிவு. இதனை ஆங்கிலேயர்களிடம் சொல்லவும் அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்தனர். மிகுந்த மன மகிழ்ச்சியுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்தான் சென்னையில் சைனா பஜார் என்றும், பூக்கடை என்றும் இப்பொழுது அழைக்கப்படும் இடம்.

பூக்கடைப் பகுதியிலே இப்பொழுது இருக்கும் கோயில்கள்தான் மணலி குடும்பத்தாரால் மிகவும் சிரத்தையுடன் , கடற்கரையிலே அமைந்திருந்த வடிவமைப்பு சிறிதும் மாறாமல் அப்படியே சிறந்த பொலிவுடன் கட்டப்பட்டு இன்று சென்னை வாழ் மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கேஸவப் பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கேஸவப் பெருமாள் கோயிலும், அதனை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீ மல்லிகேஸ்வரர் அருள்பாலிக்கும் ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயிலும்.

திருக்கோயிலின் வெளிப் பகுதி
 

மேற்படி கோயில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் தடைபெறக்கூடாது என்பதற்காக கோயிலின் ப்ரதான பெருமாளும், உற்சவ மூர்த்தியுமான  ஸ்ரீ கேஸவப் பெருமாளை திருநீர்மலையில் உள்ள  ஸ்ரீ ரங்கனாதர் / ஸ்ரீ. நீர்வண்ணப்  பெருமாள் கோயிலில் எழுந்தருளப் 
பண்ணியிருந்தனர் என்று ஒரு செவி வழிச் செய்தியும் உண்டு. இதனைப் பற்றி பின்னர் குறிப்பிடுகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருந் திரளான அளவில் பக்தர்கள் கூடும் கோயிலாக இருந்தது இத் திருக்கோயில். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் குறைந்துவிட்டது.  அக் கோயிலின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட அடியேனைப் போன்ற பலரை மன வருத்தம் அடையச் செய்யும் செய்தி இது. இதற்குக் காரணமும் உள்ளது. ஒரு காலத்தில் இக்கோயிலைச் சுற்றியுள்ள பல வீதிகள் குடியிருப்புப் பகுதிகளாக இருந்தது. எனவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டமும் கணக்கிலடங்கா. இன்றோ பெரும் வணிகத் தலமாக மாறிவிட்ட இப்பகுதிகள் மிகுந்த விலையேற்றம் கொண்டதாகிவிட்டன. இங்கு குடியிருந்தோரும் தங்கள் இல்லங்களை பெரும் விலைக்கு விற்றுவிட்டு , சென்னையின் புறநகர் பகுதிகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ சென்று விட்டனர். மேலும் இட நெரிசல், வாஹன நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறு காரணமாகவும் இப்பகுதியிலிருந்து பலர் வெளியேறிவிட்டனர்.

இன்று இக்கோயிலுக்கு முன்பு பலர் தங்கள் வாஹனங்களை நிறுத்திவைத்து கோவிலுக்கு வரும் குறைந்த அளவு பக்தர்களைக் கூட, சுலபமாக கோயிலுக்குள் நுழைய முடியாத அளவுக்கு இடையூறு செய்துகொண்டிருக்கின்றனர். பெருமாள் புறப்பாடு கண்டருளுவது கூட சிரமமாக உள்ளது. கோயிலின் அறங்காவலாராக மணலி குடும்பத்தார் இன்றைக்கும் இருந்தாலும் இக் கோயில்கள் இந்து அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதற்கு தகுந்த நிவாரனத்தை அறநிலையத் துறையினர் எடுக்கவும் இல்லை, அதைப் பற்றி சிந்திப்பதகாக் கூட தெரியவில்லை.

இனி இக்கோயிலின் சிறப்புகள் பற்றி :-

இத்திருக்கோயிலில் ஸ்ரீ கேஸவப் பெருமாள், ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் தவிர   ஸ்ரீ ராமர் ,  ஸ்ரீ கண்ணன்,  ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ.ஆஞ்சநேயர்  இவர்களுக்கு  தனித் தனி ஸன்னதிகள் உள்ளன. மேலும்  ஆழ்வார்கள் பதின்மருக்கும் , பல ஆச்சாரியர்களுக்கும் ஸன்னதிகள் அமைந்துள்ளன.  ஓவ்வொரு  ஸன்னதியிலும் மூன்று ஆழ்வார்கள் ஏள்ளியிருப்பர். கோயிலின் கோபுர வாசலுக்கு வெளிப்புறம் வாஹன மண்டபத்தில் எம்பார் ஸன்னதி உள்ளது.

பல பெரும் உபயதாரர்களைக் கொண்டு இக் கோயிலின் உற்சவங்கள் இன்றும் சிறப்புற நடந்து கொண்டுதானிருக்கிறது. உற்சவங்களுக்கு ஒறு குறையுமில்லாமல் எம்பெருமான் எப்படியாவது அதனை நிர்வகித்துக் கொண்டுவிடுகிறார். இத் திருக்கோயிலில் நடைபெரும் முக்கிய உற்சவங்கள் :-

சித்திரை மாதம் ப்ரம்மோற்சவம்

வைகாசி மாதம் வசந்த உற்சவம்

ஆனி மாதம் பத்து நாள்கள் ஸ்ரீ பெரியாழ்வார் உற்சவம்

ஆடி மாதம் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்

ஆவணி மாதம் பவித்திர உற்சவம்

புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது தாயார் உற்சவம்

மார்கழி மாதம் திருவத்யயன உற்சவம்

தை மாதம் ஆண்டாள் நீராட்ட உற்சவம்

பங்குனி மாதம் ஸ்ரீ ராமர் உற்சவம்.

மேலும் ஆழ்வார், ஆச்சாரியர்கள் வருஷ திருநக்ஷத்திரங்கள்

இவ்வளவு சிறப்பாக நடைபெறும் உற்சவங்களுக்கு மகுடம் வைத்தாற்போல் அமைந்து மேலும் சிறப்பாக நடைபெறும் உற்சவங்கள் வைகுண்ட ஏகாதசி மற்றும் கூடாரைவல்லி உற்சவங்கள். கூடாரைவல்லி அன்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் கோஷ்டி ஆகி, பெருமாள் அமுது செய்த பிரசாரதம் விநியோகிக்கப்படும். கூடாரைவல்லி என்றாலே சர்க்கரைப் பொங்கல் தானே முக்கியமான பிரசாதம் ? வேறு எந்தக் திருக்கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு அன்று பிரசாத விநியோகிக்கப்படும். அடியேன் சொல்லும் விஷயம் சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன்பானது. அப்பொழுதெல்லாம்  20 தளிகைகளுக்கும் மேல் சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடைபெறும். (ஒரு தளிகை என்பது இரண்டு படி அரிசி மற்றும் அதற்கு ஈடான வகையில் பருப்பு , வெல்லம் , முந்திரி மற்றும் நெய் ). சுமார் 2000 பேர்களுக்கு மேல் விநியோகம் நடக்கும்.

அதுபோல்தான் வைகுண்ட ஏகாதசி அன்று, சுமார் மூன்றாயிரம் தோசைகள் பெருமாள் அமுது செய்த பிறகு, வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த இரண்டு உறசவங்கள் நடைபெறும் நாள்களில் பெரும் திரளான பக்தர்கள் கூடுவர்.


கருட வாஹனத்தில் ஸ்ரீ.கேஸவப் பெருமாள்.
 


ஸ்ரீ.கேசவப் பெருமாள் - நாச்சியார் திருக்கோலம்.




அந்தக் காலங்களில் சென்னையின் மிகப் பிரசித்தி பெற்ற கோயிலாக இத் திருக்கோயிலைப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா ? அக் காலத்திய மிகப் பெரும் உபன்யாசகர்களாக இருந்த ஸ்ரீமான்கள்.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியர் ஸ்வாமி, காரப்பங்காடு வேங்கடாச்சாரியர் ஸ்வாமி, வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி, பிள்ளைலோகம் ஸ்ரீ.பாஷ்யகாரர் ஸ்வாமி மற்றும் பல வித்வான்கள் இத்திருக்கோயிலில் உபன்யாசங்கள் பலமுறை நிகழ்த்தி இருக்கின்றனர். இத் திருக்கோயிலிலே உபன்யாசங்கள் செய்வதை இவர்கள் அனைவரும் பெரும் பாக்கியமாகவே கருதினார்கள். இவர்களில் பலர் சென்னை வரும் பொழுது இவர்கள்,   எம்பெருமான் அமுது செய்த பிரசாதங்களையே விரும்பி உண்ணுவர். இத் திருக்கோயிலில் அக் காலங்களில் தினமும் ஸ்ரீ.வைஷ்ணவர்களுக்கு  ததியாராதனம் உண்டு. இதனைத் தவிர வெளி ஊர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு மதிய வேளையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்தன. பெருமாள் ஸேவைக்காக மட்டுமின்றி சென்னைக்கு அலுவல் காரணமாக வரும் பலரும் இக் கோயிலுக்கு மதியம் அளவில் தவறாமல் வந்துவிடுவர் - காரணம் இங்கு நிச்சயமாக தங்கள் பசிக்கு ஏதாவது அன்னம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதனால்தான் ஸ்ரீ.சென்னை கேஸவப் பெருமாள் கோயில் ஸ்ரீ.அன்ன கேஸவப் பெருமாள் கோயில் என்று பக்தர்களால் அழைக்கப் பெற்றதானது.

ஸ்ரீ.கேஸவப் பெருமாளுக்கு சித்திரை மாதம் நடக்கும் ப்ரம்மோற்சவத்தின் பொழுது , பெருமாள் இரண்டு வேளையும் புறப்பாடு கண்டருளுவார்.  பல வாஹனங்கள் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் ஆனது . முதல் நாள் உற்சவத்தின் புன்னைமர
வாஹனம் முதற்கொண்டு கருட வாஹனம், சிம்ம வாஹனம், சேஷ வாஹனம், யானை வாஹனம், ஹனுமந்த வாஹனம் உட்பட பல வாஹனங்கள் இத் திருக் கோயிலில் உள்ளன. கோயிலுக்கு வெளியே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை ஒட்டி தேரடி தெருவில் நுழைவில் தேர் நிலை உள்ளது. தேர் வடம் பிடிப்பதெற்கென்றே, மணலியார் குடும்பத்தில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் தேர் உற்சவத்தன்று வருவார்கள்.

இங்கு நடைபெரும் ஆழ்வார்களுக்கான உற்சவங்களில் பெரியாழ்வாருக்கு ஆனி மாதம் நடைபெரும் பெரியாழ்வார் உற்சவம் மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்கெனவே தனியாக ஒரு ட்ரஸ்ட் அந்தக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு, தினசரி உற்சவங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் உற்சவம் தொடங்கி ஒன்பதாம் நாள் உற்சவம் முடிய பெரியாழ்வார் தினசரி கோயில் உள் புறப்பாடு கணடருளி ஒய்யாளி, பத்தி உலாத்தல் நடத்தி ஆழ்வார் ஸன்னதிக்கு எழுந்தருளுவார். பத்தாம் நாள் சாற்றுமுறையன்று ஸ்ரீ.கேஸவப் பெருமாளுடன், பெரியாழ்வாரும் வெளி வீதி புறப்பாடு கண்டருளுவர். அன்று  மட்டும் பெருமாளுக்கு ஒய்யாளி மற்றும் பத்தி உலாத்தல் நடைபெரும். இரவு வெளி வீதி புறப்பாடு கண்டருளி ஸன்னதிக்கு வந்த பிறகு பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி தொடங்கும். விடிய விடிய நடக்கும் கோஷ்டி மறுநாள் காலை சுமார் 7.00 மணியளவில்
தான் சாற்றுமுறையுடன் முடியும்.

பெரியாழ்வார் உற்சவத்திற்கென்றே புகழ் பெற்ற தஞ்சாவூர் நாதஸ்வர வித்வான்கள் வரவழைக்கப்படுவார்கள். பத்தாம் நாளன்று ஒய்யாளி ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த நாதஸ்வர வித்வான்களுக்கு பல விதமான பிரசாதங்களும், தங்கத்தால் ஆன  பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். இதனைத் தவிர நல்ல பல சம்பாவனைகள்
வழங்கப்படும். இந்த உற்சவங்களுக்கு ஸேவார்த்திகள் பெருமளவில் கூடுவர்.

ஸ்ரீ.கேசவப் பெருமாளுக்கு திரு அத்யயன உற்சவம் 21 நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெரும். பகல் பத்து உற்சவத்தின் போது கோயிலுக்குள் உள் புறப்பாடும், இராப்பத்து உற்சவத்தின் போது வெளி வீதி புறப்பாடும் நடக்கும். இராப்பத்து சாற்றுமுறையன்று இரவு , கேஸவப் பெருமாள் கருட வாஹனத்திலும், நம்மாழ்வார் யானை வாஹனத்திலும் வெளி வீதி புறப்பாடு கண்டருளுவர். இப்படியாக மேலே குறிப்பிட்ட பல எம்பெருமான்களுக்கும் உற்சவங்கள் அருமையாக நடக்கும்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.செங்கமல வல்லித் தாயார் புன்னகை தவழும் திருமுகத்துடன் மிகவும் வாத்ஸல்யமாக அடியார்களுக்கு ஸேவை ஸாதிக்கிறார். அவர் திருமேனி அழகு சொல்லி மாளாது.
நவராத்திரியின் பொழுது தாயாருக்கு ஒண்பது நாள்கள் தனி உற்சவம் நடைபெரும்.


ஸ்ரீ.செங்கமலவல்லித் தாயாருடன் ஸ்ரீ.கேஸவப் பெருமாள்.


தாயார் ஸன்னதியை ஒட்டி அவருக்கு வலப்புறம் ஸ்ரீ.ராமர் ஸன்னதி உள்ளது. ஸ்ரீ.ராமநவமி உற்சவம் பத்து நாள்கள் மிகச் சிறப்பாக நடக்கும்.

ஸ்ரீ.ஆண்டாள் ஸன்னதி, ஸ்ரீ.கண்ணன் ஸன்னதி கோயிலின் இடது புறம் சொர்க்கவாசலை ஒட்டி உள்ளது. ஆண்டாள் நீராட்ட உற்சவம் மார்கழி மாதமும், திருவாடிப் பூர உற்சவம் ஆடி மாதமும் ஒன்பது நாள்கள் நடைபெரும்.

அது போலவே இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.சக்கரத்தாழ்வாரும். அவருக்கு தனியாக அமைந்துள்ள ஸன்னதி, பக்தர்கள் ப்ரதிக்ஷணம் செய்வதற்கு வசதியாக நான்கு பக்கங்களிலும் வழி அமைக்கப்பட்டு உள்ளது. பெரும் வரப் பிரசாதி. அவரின் அடி பணிந்து, அவரை ஒவ்வொரு சனிக் கிழமை அன்றும் ப்ரதிக்ஷணம் செய்யும் பக்தர்கள் இன்றும் பலர் உண்டு. சில ஆண்டுகள் முன்பு வரை ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று , மிகக் கோலாகலமாக , ஆண்டாள் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ள நீண்ட மண்டபத்தில் சக்கரத்தாழ்வாரை எழுந்தருளப் பண்ணி , ஸ்ரீ சுதர்ஸன ஹோமம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஸ்ரீ.சக்கரத்தாழ்வார் ஸன்னதியை அடுத்து ஸ்ரீ.ஆஞ்சனேயருக்கும் தனி ஸன்னதி உள்ளது. அவர் ஸன்னதியானது ஸ்ரீ.ராமர் ஸன்னதியை நோக்கி கைகூப்பிக் கொண்டு நின்றவண்ணம் இருக்கும்படி அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் அடியேன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சுமார்
99 ஆண்டுகளுக்கும் மேலாக  கைங்கர்யங்கள் செய்து வந்தனர். அடியேன் தாய் வழிப் பாட்டனாரான ஸ்ரீ.ஸ்ரீராமன் ஐயங்காரும், பிறகு அடியேன் தந்தையார். ஸ்ரீ.விஜயராகாவாச்சாரியாரும், அவருடனும், அவர் பரமபதித்த பிறகும் அடியேன் மூத்த சகோதரரான ஸ்ரீ. கேஸவ ஐயங்காரும் ( அவர் கடந்த ஆண்டு பரமபதித்துவிட்டார்) புருஷாகாரி கைங்கர்யங்கள் செய்து வந்தனர் என்பது அடியோங்கள் குடும்பத்தினர்  அனைவருக்கும் மகிழ்ச்சியே. அடியேன் தமையனார் பரமபதித்த பிறகு கைங்கர்ய தொடர்புகள் நின்றுவிட்டாலும், அடியோங்கள் குடும்பங்களை பல பல ஆண்டுகளாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இப்பெருமாள் அடியோங்களின் மனங்களில் என்றும் நிறைந்து இருப்பார்.

இத்திருக்கோயில் அன்ன கேஸவன் கோயில் என்று அழைக்கப் பெற்றதற்கு மேலும் ஒரு காரணம், இங்கு பெருமாள் அமுது செய்ய தயாராகும் பிரஸாதங்கள். ஆம். ஒவ்வொரு பிரசாதமும் மிக்க சுவையுடன் அருமையாக இருக்கும். இத் திருக்கோயில் மடப்பள்ளி கைங்கர்யம் கும்பகோணம் ஸ்ரீ.சேஷாத்திரி ஸ்வாமிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது கைவண்ணம் பிரசாதங்களின் சுவையில் மணக்கும். ஸேவார்த்திகள் , பக்தர்கள் அனைவருக்கும் கை நிறைய பிரசாதங்கள் வழங்கப் படும். ஒரு காலத்தில் முன்னாள் முதலமைச்சரும், இத்திருக்கோயில் அறங்காவலராக இருந்த மணலி ஸ்ரீ.ராமகிருஷ்ண முதலியாரின் அத்யந்த நண்பருமான ஸ்ரீ. பக்தவச்சலம் அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இத் திருக்கோயிலுக்கு வருவார். பெருமாள் மீது ஈடுபாடும் , இக் கோயில் பிரசாதங்களின் மேல் மிக்க விருப்பமும் கொண்டிருந்தார். இவர் வர முடியாத வாரங்களில் , பிரசாதங்களை எடுத்துக் கொண்டு அவர் வீட்டில் கொடுத்துவிட்டு வருவர் இக் கோயில் ஊழியர்கள்.


இத் திருக்கோயிலைப் பற்றி குறிப்பிடும் போது மிக முக்கியமாகச் சொல்லப்பட வேண்டியவர் இங்கு அர்ச்சகராக கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீ.சந்தான பட்டர் ஸ்வாமிகள். அவர் பெருமாளுக்கு சாற்றும் , சாற்றுப்படிகள் அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு பென்சிலையும், ஒரு வெள்ளைத் தாளையும் இவரிடம் கொடுத்தால், அப்படியே , எம்பெருமானையும், தாயாரையும் வைத்த கை எடுக்காமல் சித்திரம் தீட்டி கொடுத்துவிடுவார். யாக சாலை விற்பன்னர். முக்கியமாக ஸ்ரீ.சுதர்ஸன ஹோமம் செய்வதில் புலமை பெற்றவர். சுமார் 85 ஆண்டுகள் வரை இக் கோயிலில் அர்ச்சகக் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஸ்வாமி , பரமபதித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது.


ஸ்ரீ.சந்தான பட்டர் சதாபிஷேகத்தின் போது அவருடன் கூட ஸ்ரீ.பார்த்தசாரதி திருக்கோயில் ஸ்ரீ.வேங்கடகிருஷ்ணன் பட்டர்,

ஸ்ரீ.சந்தான பட்டர்
 

அன்றைய காலகட்டங்களிலே பெருமாள் புறப்பாடு கண்டருளும் வீதிகள் நிறைய. அவை தேவராஜ முதலித் தெரு, ராசப்பச் செட்டி தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு, நாராயண முதலி தெரு, காசி செட்டி தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை என்று. ஆனால் இன்றைய நாள்களில் நாராயண
முதலித் தெரு, காசி செட்டி தெரு, கோவிந்தப்ப நாயக்கன்
தெருக்களில் நுழைவதே கடினம். இத் தெருக்களில் மக்கள் கூட்டமும், வணிகத்திற்காக வரும் ஊர்திகள் உட்பட பல இடைஞ்சல்களால் சாதாரணமாக நடந்து செல்வதே மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே பெருமாள் இவ்வீதிகளில் புறப்பாடு கண்டருளுவதில்லை என்றே நினைக்கிறேன்.

இத்திருக்கோயிலானது சென்னையின் முக்கிய கேந்திரமான, பாரி முனைக்கு அருகில், பூக்கடை காவல் நிலையத்திற்கு அருகாமையில், தேவராஜ முதலித் தெருவில் உள்ளது.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் தவறாமல் இத்திருக்கோயில் எம்பெருமான்களை ஸேவித்து ஸ்ரீ.கேஸவப் பெருமாளின் அனுக்ரஹத்தைப் பெற வேண்டுகிறோம்.

இத்திருக்கோயிலைப் பற்றி குறிப்பிடும் பொழுது , இக் கோயிலின் அறங்காவலர்களாக இருக்கும் மணலி குடும்பத்தாரைப் பற்றி ஒரு செய்தி. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்கள் பல நற்காரியங்கள் செய்வதிலும் நல்ல மனம் கொண்டவர்கள். சென்னை கிண்டியில் ஒரு பெரிய இடத்தில் நல்ல வசதிகளுடன், ஏழை மாணவர்கள் தங்கி படிப்பதற்காக  இலவசமாக இடம் கொடுத்து உதவி செய்கின்றனர். இது இவர்கள் நடத்தும் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

ஸ்ரீ.செங்கமலவல்லி ஸமேத ஸ்ரீ.கேஸவப் பெருமாள் திருவடிகளே
சரணம்.













 

No comments:

Post a Comment