Sunday, March 8, 2015

முதலாழ்வார்களும் அவர்களின் பெயர் காரணமும்.

ஆழ்வார்கள் பதின்மரில் முதலாழ்வர்கள் மூவர். அவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

பலருக்கும் இந்த ஆழ்வார்களுக்கு எப்படி இம்மாதிரியான பெயர்கள் உண்டானது என்று வியப்பாக இருக்கும். ஆனால் இந்த மூன்று ஆழ்வார்களுக்குமான பெயர்களுக்கு காரணம் உள்ளது.அது பற்றி கீழே விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பு :- அடியேனின் இக்கட்டுரைக்கு, மூல காரணமாக இருப்பது தென் திருப்பேரை .ஸ்ரீ. அரவிந்தலோசனன் ஸ்வாமி அவர்கள் அருளிச் செய்த உபன்யாசமாகும். பல தகவல்கள் அவரின் உபன்யாசத்திலிருந்து திரட்டப்பட்டது. ஆகவே முதற்கண் அந்த ஸ்வாமிக்கு அடியேனின் மானசீக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொய்கை ஆழ்வார் :-


பொய்கை என்பது தாமரை புஷ்பத்தைக் குறிக்கும். அப்படியான தாமரை புஷ்பங்கள் மலர்ந்திருக்கக் கூடிய குளத்திலே அவதாரம் பண்ணினார். அதன் காரணமாக அவருக்கு பொய்கை ஆழ்வார் என்ற பெயர் ஏற்பட்டது. எந்த தாய் , தந்தைக்கும் மகனாகப் பிறக்காமல் , அயோநிஜராக பிறந்தவர். அயோநிஜர் என்றால் தானாகத் தோன்றியவர்.

 பொய்கை ஆழ்வார் , காஞ்சிபுரத்திலே, திருவெக்கா எம்பெருமான் ஸ்ரீ.யதோத்தகாரி ஸன்னதிக்கு அருகிலுள்ள பொய்கையில்,
ஐப்பசி மாதம் திருவோணம் நக்ஷத்திரத்திலே அவதரித்தார்.
நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் அருளப்படுவதற்கு முதல் காரணமாக இருந்த மூன்று ஆழ்வார்களில் இவர் முதல்வர்.

பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த பிரபந்தமானது " முதல் திருவந்தாதி " என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவந்தாதியிலே -
" வையம் தகளியா, வார்கடலே நெய்யாக * வெய்ய கதிரோன் விளக்காக * செய்ய சுடர் ஆழியான் அடிக்கே * சூட்டினேன் சொல்மாலை * இடராழி நீங்குகவே என்று " தொடங்கி நூறு பாசுரங்கள் இவரால் அருளப்பெற்றது.

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.


பூதத்தாழ்வார் : -

பூதம் + ஆழ்வார்  = பூதத்தாழ்வார்.



பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. புரசத்காயாம் என்றால் இருக்கக் கூடியது என்று அர்த்தம்.

இந்த உலகத்திலே இருக்கக் கூடிய பொருள்கள் எவை ? அவைகள் நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் தீ. இவற்றை பஞ்ச பூதங்கள் என்று கூறுகிறோம். எக்காலத்திலும் அழியாதது இவைகள்.

அப்படியென்றால் இவ்வுலகத்திலே நிலைத்து இல்லாமல் அழியக் கூடியவை எவை ?  அவைகள் பலம், கல்வி, அழகு, செல்வம் போன்றவை.

உதாரணத்திற்கு பலத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒரு மனிதனுடைய  பலம் நிலைத்து நிற்கக் கூடியதா என்று கேட்டால் , இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒருவர் தாம் இளைஞராக இருக்கும் பொழுது, மிகச் சுலபமாக 50, 100, ஏன் சிலரால் 200 கிலோ வரை கூட உள்ள பொருட்களை தூக்க முடியும். இதற்குக் காரணம் அவருடைய பலம். அதே மனிதன் சுமார் 50, 60 வயதைக் கடந்த பிறகு அவரால் 
10 அல்லது 20 கிலோ எடையுள்ள பொருளைக் கூட தூக்க முடியாது. காரணம் அவர் அந்த வயதில் தன் பலத்தை இழந்து விட்டிருப்பார். பலம் நிலையில்லாதது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கல்வியும் அழியும் தன்மை கொண்டதே. நன்கு கல்வி கற்றவர்கள், இளம் வயதில் நல்ல அறிவாற்றல் பெற்று விளங்குவார்கள். காலம் செல்லச் செல்ல, வயோதிக நிலையை அடையும் பொழுது, நமக்கு
நினைவாற்றல் குறைந்து , நாம் கற்ற கல்வியின் திறத்தினை நினைவில் கொள்வது கடினம். ஆகவே கல்வியும் நிலையற்றது என்பது திண்ணம்.

அதே போல்தான் அழகு. அழகு மாறும் தன்மை கொண்டது. ஒரு பெண்மணியை எடுத்துக் கொண்டால் , அவரின் இளைமைப் பிராயத்திலே மிகவும் அழகாக இருப்பார்.  ஆனால் ஆண்டுகள் கழியக் கழிய, அப் பெண் முதுமை அடைந்த காலத்தில் அவரின் அழகு மறைந்து போய் இருக்கும். எப்படி இருந்த இவர் எப்படி மாறிவிட்டார் என்று நினைக்கத் தோன்றும். இது இயற்கையின் நியதி.  பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும். ஆகவே அழகு என்பதும் நிலையில்லாததாகிறது. 

அடுத்தது செல்வம் . இதுவும் நிலையில்லாததுதான். இன்று பணக்காரனாக இருப்பவன் சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழந்து ஏழையாகிவிட்டிருப்பான். எத்தனையோ செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டிருப்பதை பலரும் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஆகவே செல்வமும் நிலையற்றதுதான்.

மேலும் நிலையில்லாத பலமும், அழகும், அறிவும், செல்வமும் உடையவன் தான் உயர்ந்தவன் என்றும்,  இவை அணைத்தும் இல்லாதவன் தாழ்ந்தவன் என்ற எண்ணமும் தவறு. 

பின் எதுதான் நிலையாக இருக்கக் கூடியது ?

அது பகவத் பக்தி, பகவத் ஞானம், பகவானைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்னும் வைராக்கியம். இவைகள் தான் கண்டிப்பாக ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அது இருந்தால் என்றும் அழியாத தன்மையுடனே ஒருவன் இருப்பான். இம் மண்ணுலகில் மட்டுமல்ல, விண்ணுலகம் அடையும் போதும் அது கூடவே இருக்கும்.

மேலே சொன்ன பலம், கல்வி, அழகு, செல்வம் இவை அனைத்தும் ஒருவரிடம் இருந்தாலும் அவர் இல்லாதவனாகவே கொள்ளப்படுவான். ஆனால் எவர் ஒருவரிடம் பகவத் பக்தி, ஞானம், வைராக்கியம் இருக்கிறதோ அவர் மட்டுமே இருப்பவராகக் கொள்ளப்படுகிறார். அவரே நிலையானவர்.

ஆகவே இங்கே  நிலையாக இருப்பவன் என்றால் அது பகவானைப் பற்றி, ஸ்ரீமன். நாராயணனைப் பற்றி அறிந்திருப்பவனே ஆவான்.

பூதம் என்றால் நிலையானது என்று சொல்லி, அதற்கு உதாரணமாக பஞ்ச பூதங்கள் பற்றி குறிப்பிட்டோமல்லவா ? பூதத்தாழ்வார், அவ்வாறு எப்பொழுதும் ஸ்ரீமன்.நாராயணனைப் பற்றியும், மிகவும் பக்தியுடன், பகவானைத் தவிர வேறு விஷயம் ஒன்றும் இல்லை என்ற வைராக்கியத்துடன் இருந்தவர். இதன் காரணமாகவே இவர் பூதத்தாழ்வார் என்று அழைக்கப்பெற்றார்.

பூதத்தாழ்வார் அவதாரம் செய்த ஊர் , ஸ்ரீ.ஸ்தலசயணப் பெருமாள் எழுந்தருளியுள்ள திருத்தலமான திருக்கடல்மல்லை ஆகும். ஐப்பசி மாதத்திலே அவிட்டம் நக்ஷத்திரத்திலே , மாதவி புஷ்பத்தில், அவதரித்தவர் ஆழ்வார்களில் இரண்டாமவரான ஸ்ரீ.பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வார் அருளிச்செய்த பிரபந்தமானது இரண்டாம் திருவந்தாதி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவந்தாதியிலே ஆழ்வார்,
" அன்பே தகளியா * ஆர்வமே நெய்யாக *  இன்புருகு சிந்தை இடுதிரியா * நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன்* நாரணற்கு*
ஞானத் தமிழ் புரிந்த நான் * என்று தொடங்கி நூறு பாசுரங்களை அருளிச்செய்துள்ளார்.

பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.


பேயாழ்வார் :-


பெம்மை + ஆழ்வார்  = பேயாழ்வார்.

இங்கே இவ்வாழ்வாரின் பெயர் காரணத்தை தெரிந்து கொள்வதற்கு முன், நாம் சற்று தமிழ் இலக்கணத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அதற்குண்டான ஒரு உதாரணத்தையும் பார்ப்போம்.

எம்பெருமானின் திருவடிகளை நாம் சேவடி என்று அழைக்கிறோம். அதை ஏன் அவ்வாறு அழைக்கிறோம் ? சேவடி என்றால் செம்மையாக இருக்கக் கூடிய அடி என்று பொருள். அடி என்றால் கால். செம்மை என்றால் சிவந்திருக்கக் கூடிய என்று பொருள்.  

தமிழ் இலக்கணத்திலே செம்மை இருந்து, பின்னால் அடி என்ற வார்த்தை சேர்ந்தால்,  " ம்மை " போய் விடும். மேலும் "செ " என்பது குறில், " அ " என்பது அகரம். "செ" என்ற குறிலுடன் " அ " என்ற அகரம் சேர்ந்தால்,  அந்த "செ" வானது நெடில் ஆகி, " சே " என்று மாறிவிடும்.  ஆகையால் சிவந்திருக்கக் கூடிய செம்மையான (திரு ) அடி உடைய எம்பெருமானின் திருப்பாதங்களை "சேவடி " என்கிறோம்.

அது போலவே " பெம்மை " என்றால் பெருமை உடையவர் என்று பொருள்.  இந்த " பெம்மை " யுடன்  "ஆழ்வாரின் "  முதல் எழுத்தான " ஆ " என்ற அகரம் சேர்ந்ததினால், இங்கும் " பெம்மை "
என்ற சொல்லில் "ம்மை"  போய்விடுகிறது. 
" பெ " என்ற குறிலும் " பே " என்ற நெடில் ஆகிறது.  ஆகவே இவ்வாழ்வார் " பேயாழ்வார் " என்று அழைக்கப்பெருகிறார். மஹாதாத்வயர் என்று ஸமஸ்கிருதத்திலே இவ்வாழ்வார்  அழைக்கப்படுகிறார்.  " மஹதா " என்றால் மிகப் பெரிய பெருமை உடையவர் என்று பொருள்.  மிகப் பெரிய பெருமை உடையவரான இவர்
" பேயாழ்வார் " என்று அழைக்கப்பெற்றார்.


பேயாழ்வார் , ஆதிகேஸவப் பெருமாள் குடி கொண்டிருக்கும் திருமயிலையிலே, ஐப்பசி மாதம் சதயம் திருநக்ஷத்திரத்திலே, அல்லி மலரிலே அவதரித்தவர் ஆவார்.

முதல் மூவரிலே, மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் அருளிச் செய்த திவ்யப் பிரபந்தமானது
" மூன்றாம் திருவந்தாதி " என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவந்தாதியிலே ஆழ்வார் -

" திருக்கண்டேன், பொன் மேனி கண்டேன் *
திகழும் அருட் கண் அணி நிறமும் கண்டேன் *
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் * 
புரி சங்கம் கைக் கண்டேன் " என்று தொடங்கி
நூறு பாசுரங்களை அருளிச் செய்துள்ளார்.

பேயாழ்வார் திருவடிகளே சரணம்.


பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஒரே ஆண்டிலே , ஐப்பசி மாதத்திலே திருவோணம் தொடங்கி, அவிட்டம் , சதயம் என அடுத்தடுத்த திருநக்ஷத்திரங்களில் அவதரித்து, அடியார்களாகிய நாமெல்லாம் எம்பெருமானைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக பிரபந்தங்களை இயற்றிய காரணகர்த்தர்களாக இருந்து, இவர்களுக்குப் பின் வந்த மேலும் பல ஆழ்வார்களும் , அவர்களின் ஈரச் சொற்களிலே உதிர்த்த பிரபந்தங்களை நாமெல்லாம் பாராயணம் பண்ணி , பகவானை அனுதினமும் நினைத்து, நினைத்து மகிழ்ந்து உவகை கொள்ளும் விதமாக எம்பெருமான் மூலம் அருள் புரிந்த ஆழ்வார்களின் அடிபணிந்து, எம்பெருமான் திருவடிகளிலே
 சரணடைவோம். 













 

1 comment:

  1. புரசத்காயாம் should be bhU saththAyAm as far as adiyen remembers.
    adiyen ramanuja dasan

    ReplyDelete