அடியேன் , திவ்ய தேஸங்கள் பற்றியும், அந்த திவ்ய தேஸங்களை தங்கள் பாசுரங்கள் மூலம் எந்த எந்த ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ளார்கள் என்பது பற்றியும், எத்தனை பாசுரங்கள் என்பது பற்றியும், அந்த பாசுரங்கள் பற்றிய தகவல்களை பதிவிடுவதில் ஆர்வமுடன் ஈடுபட விரும்பினேன்.
முதல் பதிவாக பூலோக வைகுண்டமும், எம்பெருமானின் முதல் முக்கிய திவ்ய தேஸமாகிய திருவரங்கம் பற்றி அடியேன் மனதில் பதிந்தவைகளை பற்றிய பதிவு :-
"கோயில்" என்றால் அது திருவரங்கம் திவ்ய தேஸமாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் மூலவர் பெரிய பெருமாளாகிய ஸ்ரீ.ரங்கனாதர், உற்சவர் ஸ்ரீ.நம்பெருமாள் , தாயார் பெரியபிராட்டியார் ஸ்ரீ.ரங்கநாயகி தாயார் . பலபல ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஸ்ரீ.ராமபிரான் , தான் ஆராதித்த அவர்தம் குலத்ய்வமாக இருந்த ஸ்ரீ.ரங்கனாதரை, ஸ்ரீ.விபீஷ்ணனுக்கு அருளினார். விபீஷ்ணன் அயோத்தியில் இருந்து புறப்பட்டு, இலங்கை செல்லும் வழியில், ஸ்ரீ.ரங்கனாதரை ,காவிரியும். , கொள்ளிடம் நதியும் சுற்றியுள்ள ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப் பண்ணினார். விபீஷ்ணன் மீண்டும் அவரை எழுந்தருளப் பண்ண முயற்சிக்கும் பொழுது, முடியாமல் போக, எம்பெருமான் தான் அங்கேயே வாசம் செய்ய இருப்பதாகக் கூறி விபீஷ்ணனை அனுப்பிவிட்டார்.
ஆழ்வார்கள் பன்னிருவரில் மதுரகவி ஆழ்வார் தவிர்த்து, பதினோரு அழ்வார்களால் மங்களாஸாஸன்ம் செய்யப் பெற்ற ஒரே எம்பெருமான் ஸ்ரீ.ரங்கனாதன் மட்டுமே. நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் அதிகமான பாசுரங்கள் அவருக்கு மட்டுமே. மொத்தம் 247 பாசுரங்கள். பதினோரு ஆழ்வார்களில் , திருவரங்க திவ்ய தேஸத்தை மட்டுமே அருளிச் செய்த ஆழ்வார் ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார். மற்ற ஆழ்வார்கள் சில பல திவ்ய தேஸங்களை தங்கள் பாசுரங்களில் மங்களா ஸாஸனம் செய்துள்ளார்கள்.
இனி ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ள பாசுரங்கள் பற்றிய விவரங்கள் :-
ஆழ்வார்களின் தலைவரான ஸ்ரீ.நம்மாழ்வார் அருளிச் செய்த , திருவாய்மொழியின் ஏழாம் பத்தின் இரண்டாம் திருமொழியில் 11 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 12 ஆம் பாசுரமாகிய ஒரு பாசுரமும் சேர்த்து மொத்தம் 12 பாசுரங்கள் அருளிச்செய்துள்ளார்.
முதலாழ்வார்களில் முதல்வரான ஸ்ரீ.பொய்கை ஆழ்வார் அருளிச்செய்த "முதல் திருவந்தாதி"யில் ஆறாம் பாசுரமான ஒரு பாசுரம்.
முதலாழ்வார்களில் இரண்டாமவரான ஸ்ரீ.பூதத்தாழ்வார் அருளிச்செய்த "இரண்டாம் திருவந்தாதி" யின், 28, 46, 70 மற்றும் 88 வது பாசுரங்களாகிய
நான்கு பாசுரங்கள்.
முதலாழ்வார்களில் மூன்றாவது ஆழ்வாரான ஸ்ரீ.பேயாழ்வார் அருளிச் செய்த "மூன்றாம் திருவந்தாதி" யின் , 61 மற்றும் 62 வது பாசுரங்களான இரண்டு பாசுரங்கள்.
பூவுலகில் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவரும், சில மதங்களில் இருந்து பின் ஸ்ரீ.பேயாழ்வாரால், ஸ்ரீ,வைஷ்ணவ மதத்திற்கு மாறியவருமான ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த " திருச்சந்தவிருத்தம் " பாசுரங்களில் 21, 49, 50, 51, 52, 53, 54, 55, 93 மற்றும் 119 வது பாசுரம் , மேலும் "நான்முகன் திருவந்தாதி " யில் 3, 30, 36 மற்றும் 60 வது பாசுரம் உட்பட மொத்தம் 14 பாசுரங்கள்.
ஸ்ரீ.பெரியாழ்வார் அருளிச் செய்துள்ள " பெரியாழ்வார் திருமொழி " யின்
இரண்டாம் பத்தின் ஆறாம் திருமொழியின் இரண்டாவது மற்றும் எட்டாவது பாசுரங்கள், இரண்டாம் பத்தின் ஒன்பதாம் திருமொழியின் பதினோறாவது பாசுரம், மூன்றாம் பத்தின் மூன்றாம் திருமொழியின் இரண்டாவது பாசுரம், நான்காம் பத்தின் எட்டாம் திருமொழி தொடங்கி பத்தாம் திருமொழி முடிய , ஒவ்வொரு திருமொழியின் பத்து பாசுரங்கள் உட்பட மொத்தம் முப்பத்து ஐந்து பாசுரங்கள்.
ஸ்ரீ.ஆண்டாள் அருளிச் செய்த " நாச்சியார் திருமொழி " யின் , பதினோறாம் திருமொழியின் பத்து பாசுரங்கள்.
ஸ்ரீ.குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த " பெருமாள் திருமொழி" யில் , முதல் திருமொழி தொடங்கி மூன்றாம் திருமொழி வரை 30 பாசுரங்களும், எட்டாம் திருமொழியின் , பத்தாம் பாசுரம் உட்பட மொத்தம் 31 பாசுரங்கள்.
ஸ்ரீ.திருப்பாணாழ்வார் அருளிச் செய்துள்ள " அமலனாதிபிரான் " னின் பத்து பாசுரங்கள்.
ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்துள்ள " திருமாலை " யின் 45 பாசுரங்களும், " திருப்பள்ளியெழுச்சி " யின் பத்து பாசுரங்களும் சேர்த்து மொத்தம் 55 பாசுரங்கள். மேலே குறிப்பிட்டபடி எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேஸங்களில் , திருவரங்க திவ்ய தேஸத்தை மட்டுமே தன் பாசுரங்களில் அருளிச் செய்துள்ள ஒரே ஆழ்வார் இவர் மட்டுமே,
ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாராக அவதரித்த ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்துள்ள " பெரிய திருமொழி " யின் முதல் பத்தின் எட்டாம் திருமொழியின் இரண்டாம் பாசுரம், மூன்றாம் பத்தின் ஏழாம் திருமொழியின் ஆறாம் பாசுரம், ஐந்தாம் பத்தின் , நான்கு, ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் திருமொழி உட்பட மொத்தம் 50 பாசுரங்கள், ஆறாம் பத்தின் ஆறாம் திருமொழியின் ஒன்பதாம் பாசுரம், ஏழாம் பத்தின் மூன்றாம் திருமொழியின் நான்காம் பாசுரம், எட்டாம் திருமொழியின் இரண்டாம் பத்தின் ஏழாம் பாசுரம், ஒன்பதாம் பத்தின் ஒன்பதாம் திருமொழியின் இரண்டாம் பாசுரம், பதினோறாம் திருமொழியின் மூன்றாம் பத்தின் ஏழாம் பாசுரம், பதினோறாம் திருமொழியின் எட்டாம் பத்தின் எட்டாம் பாசுரம். ஆக மொத்தம் 58 பாசுரங்கள்.
" திருகுறுந்தாண்டகத்தின் " ஏழு, பண்ணிரண்டு, பதிமூன்று மற்றும் பத்தொன்பதாம் பாசுரம் உட்பட மொத்தம் நான்கு பாசுரங்கள்
.
" திருநெடுந்தாண்டகத்தின் " 11, 12, 14, 18, 19, 22, 23, 24, 25 ஆம் பாசுரங்களுடன் சேர்த்து மொத்தம் 9 பாசுரங்கள்.
" சிறிய திருமடல் " இல் ஒரு பாசுரமும், " பெரிய திருமடல் " இல் ஒரு பாசுரமும்.
ஆக மொத்தம் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்துள்ள பாசுரங்கள் மொத்தம் 73.
ஆக திருவரங்கத் திருப்பதியின் ஸ்ரீ.ரங்கனாதனை மங்களாஸாஸனம் செய்த பதினோரு ஆழ்வார்களின் மொத்த பாசுரங்கள் 247 .
No comments:
Post a Comment