Saturday, October 10, 2020

 

நன்றி மறப்பது நன்றன்று ,

 

 நன்கு வாழ வைத்தவர்களை என்றும் மறக்காமல் இருப்பது மிகவும் நன்று. என் வாழ்க்கையை வளப்படுத்திய ஸ்ரீ.திருமலை அனந்தான்பிள்ளை நரசிம்மன் ஸ்வாமி பற்றிய அடியேனின் சிறு குறிப்பு.

 

நிறுவனத்தை தொடங்கிய ஸ்ரீ.டி.வி.சுந்தரம் ஐயங்கார் அவர்களிடம் முதலில் வேலைக்குச் சேர்ந்து , பின் காலத்தில் சுந்தரம் சாரிடியின் நிர்வாக இயக்குனராக இருந்த டிஏடி சாரி என்று திருவல்லிக்கேணியில் பிரபலமானவரும், ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலின் முன்னாள் அறங்காவலராக இருந்தவரின் இளைய சகோதரருமான ஸ்ரீ.டி.ஏ. திருவேங்கடாச்சாரியர் ஸ்வாமியின் மூத்த குமாரர் ஸ்ரீ.டி.ஏ.நரசிம்மன் ஸ்வாமி ஆவார்கள். திருவல்லிக்கேணி ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலின் ஸ்தல பெருமாளான மூலவர் ஸ்ரீ.யோகா நரசிம்மர், உற்சவர் ஸ்ரீ.தெள்ளியஸிங்கரிடம் அபார பத்தி கொண்டவர். அவர் டிவிஎஸ் நிறுவனத்தைச் சார்ந்த பிரேக்ஸ் இந்தியா தொழிற்சாலையில், மார்க்கெடிங் பகுதியில் ஆரம்பத்தில் துணை மேலாளராகவும், பிற்காலத்தில் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்றவர்.

 

அடியேனின் மீது மிகுந்த பற்று கொண்டவரும், அடியேனின் இன்றைய வாழ்க்கை நலமுடனும், வளமுடனும் இருப்பதற்கு அவர்தான் முக்கிய காரணம். அடியேனை அவரின் உடன்பிறவா சகோதராக வழி நடத்தி, இளமை வயதின் அறியாக் காலத்திலே அடியேன் செய்த சில தவறுகளை சரி செய்து, அடியேனை நேர்படுத்தி நல்ல திசையில் திருப்பிவிட்டவர் அவர். இத்தனைக்கும் அவரை அடியேன், பிரேக்ஸ் இந்தியாவில், நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போதுதான்  முதலில் சந்தித்தேன். இப்படி முன் அறிமுகம் இல்லாத அடியேனை , நேர்முகத் தேர்வில் அவரின் கேள்விகளுக்கு அடியேன் அளித்த பதில்களும், செய்கைகளும் அவருக்கு பிடித்துப் போய், நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த 49 பேரில் அடியேனை மட்டும் தேர்ந்தெடுத்தார்.

 

இனி அடியேனின் ஆரம்பகால செய்திகளையும் , அவர் எப்படி என்னை வளப்படுத்தினார் என்பது பற்றிய நிகழ்வுகளையும், சாதாரன வழக்கு மொழியில்  கீழே வெளிப்படுத்தியுள்ளேன்.

 

1970 ஆம் ஆண்டு, அப்பொழுது எனக்கு 18 வயது. அப்பொழுது நான் வைஷ்ணவா கல்லூரியில் பட்டப் படிப்பிற்கு சேர்ந்திருந்தேன். அச் சமயம் எனது இரண்டாவது மூத்த சகோதரர் அவரின் BA படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தந்தையை மிக இளமைப் பருவத்திலேயே இழந்திருந்த எங்களின் வளர்ப்புக்கும், வளர்ச்சிக்கும் எம்பெருமான் அனுக்ரஹத்தால்,  அடியோங்களின் தாயாரும், அடியோங்களின் தகப்பனாரின் தாய் மட்டுமே காரணம். அப்பொழுது Brakes India நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் மூலம் என் சகோதரருக்கு வேலை கேட்டுக் கொண்டிருந்த பொழுது, அங்கு குமாஸ்தா வேலைக்கு , பட்டப் படிப்பு முடித்தவர்களை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்று அவர் கூறினார். அதனால் எனது தாயார் அப்படி என்றால் தனது அடுத்த மகனான என்னை , நானும் படிப்பை முடித்துவிட்டு அவதிப்பட வேண்டாம் என்றும் காரணத்தினால், எனக்கு வேலை வாங்கிக் கொடுக்கும்படி அவரிடம் கூறினார்.

 

படிப்பை நிறுத்துவதில் விருப்பமில்லை என்றாலும், தாயின் கட்டளையை மீற முடியாத காரணத்தினால், அந்த நண்பர் மூலம் நான் நேர்முகத் தேர்வுக்கு நிறுவனத்திற்கு சென்றேன். அங்குதான் அடியேன் மேலே குறிப்பிட்ட   ன் துணை மேலாளராக இருந்த திரு.திருமலை அனந்தான்பிள்ளை நரசிம்மன் ஸ்வாமி என்னை வேலைக்கு தேர்வு செய்தார். முதல் வருடம் தினசரி சம்பளத்துடன் தற்காலிக வேலைதான். அடுத்த வருடம் என் வேலை செய்யும் திறமையை புகழ்ந்து என்னை நிரந்தர ஊழியராக ஆக்குவதாக் கூறினார். ஆனால் ஒரே ஒரு வேலை தான் என்ற காரணத்தினால், மத்திய அரசில் அப்பொழுது பெரும் பதவி வகித்துக் கொண்டிருந்த ஒருவரின் சிபாரிசினால் , வேறு ஒருவருக்கு அந்த வேலை கிடைக்க நான் வெளியேற்றப்பட்டேன். இருந்தும் அப்பொழுது ஸ்ரீ. நரசிம்மன் ஸ்வாமி அவர்கள் என்னிடம் “ கவலை கொள்ளாதே, உன் உழைப்பையும், நேர்மையையும், திறமையையும் நான் அறிந்தவனாகையால்,உனக்கு வெகு விரைவில், கண்டிப்பாக வேலை வாங்கித் தருகிறேன் “ என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். எம்பெருமானின் அனுக்ரஹத்தால், அவரின் முயற்சியின் மூலம் எனக்கு இரண்டு வாரங்களுக்குள்ளாகவே , நிரந்தர பணி நியமனம் கிடைக்கப்பெற்றேன். எம்பெருமான் அனுக்ரஹம் எப்படி என்றால் , நான் வேலை இழந்த காலத்தில் இருந்த சென்ன கேசவப் பெருமாள் கோயிலின் தேரடி தெருவில் வசித்து வந்ததால், ஸ்ரீ.கேசவப் பெருமாளை வேண்டிக் கொண்டு, அங்குள்ள ஸ்ரீ.சக்கரத்தாழ்வார் ஸன்னதியை தினசரி 12 முறை ப்ரதக்ஷணம் செய்து கொண்டிருந்ததால் பெருமாள் அனுக்ரஹத்தின் மூலம் இந்த பணி நிரந்தரமாகக் கிடைக்கப்பெற்றது.

 

அவரின் வழிகாட்டுதலின் படி , என் பணி நல்லபடியாக போய்க் கொண்டிருந்த வேளையில்தான் ஒரு விபரிதம் நடந்தது. அது 1977 ஆம் ஆண்டு, அந்த நிறுவனத்தில், கம்யூனிஸ்ட்கள் எப்படியாவது, பாடி பகுதியில் உள்ள அனைத்து TVS நிறுவனங்களிலும், உள்ள தொழிற்சங்கங்களை வளைக்க எண்ணி , தொழிலாளர்களையும், ஊழியர்களையும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். மிகச் சிலரை தவிர மற்ற எல்லோரும் இந்த கம்யூனிஸ்ட் வாதிகளின் வார்த்தை ஜாலங்களால் ஈர்க்கப்பட்டு, தேவையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால், அங்குள்ள தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட 17ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அந்த நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

 

தினசரி  தொழிற்சாலைகளில் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடைபெற வைத்து , ஊழியர்களையும் , தொழிலாளர்களையும் மேடை ஏறி நிர்வாகத்திற்கு எதிராக பேச வைத்தனர். அப்பொழுது உடனிருந்த நண்பர்கள் பலர், “ ராகவன் நன்றாகப் பேசுவான். அவனையும் பேச சொல்லுங்கள்” என்று அங்கிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களான கேடிகே.தங்கமணி, விபி.சிந்தன் போன்றவர்களிடம் சொல்ல, நானும் என் இளமை முறுக்கு காரணமாகவும், மற்றவர்களின் புகழ்ச்சிக்கு மயங்கியும் , என் வருங்காலத்தைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல், மேடை ஏறி, நிர்வாகத்தை எதிர்த்து,  வீராப்பாகப் பேசி விட்டேன்.  ஆனால் இந்த வெற்று கம்யூனிஸ்ட்களால் அந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தை கடைசி வரையில் கைப்பற்ற முடியாமல் போய்விட்ட காரணத்தினால், அங்கு அவர்களுக்காக போராட்டங்களில் கலந்து கொண்டு, நிர்வாகத்திற்கு எதிராக இருந்த தொழிலாளர்களையும், ஊழியர்களையும் அம்போ என்று விட்டுவிட்டு அவர்கள் வேறு தொழிற்சாலைகளில் தங்கள் கைவரிசையைக் காட்ட சென்று விட்டனர்.

 

இந்த நேரத்தில் அனைத்து TVS தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களை எடுக்க முடிவு செய்து, பலரையும் முதலில் பணி இடை நீக்கம் செய்து , பின் நிறந்தரமாக வெளியேற்றவும் முடிவு செய்திருந்தனர். அந்த பட்டியலில் எனது பெயரும் இருந்ததாம். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சுமார் 300 தொழிலாளர்கள் / ஊழியர்கள் வேலை இழந்தனர். ஆனால் எனக்கு மட்டும் வேலை இழப்பில்லை. அதற்குக் காரணம் :-

 

இங்குதான் எனது மேலதிகாரியாக இருந்த ஸ்ரீ.நரசிம்மன் ஸ்வாமி எனக்காக மிக சிரமங்களை மேற்கொண்டு என்னை காப்பாற்றினார். காப்பாற்றியது மட்டுமல்லாமல் , என் வாழ்க்கையை வளமுறச் செய்ய மேற்கொண்டு எனக்கு வழிகாட்டியாக இருந்து, பறிபோக இருந்த எனது பணியையும் மீட்டுக் கொடுத்தார். என் வாழ்வை மாற்றி அமைத்தார். எல்லாம் ஸ்ரீ.தெள்ளியஸிங்கரின் அனுக்ரஹம்தான். அவர் நிறுவன உரிமையாளர்களிடம் எனக்காக வாதிட்டு, நான் உண்மையில் நல்லவன் என்றும், நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு நன்கு உழைப்பவன் என்றும், என்னுடைய சேர்க்கை சரியில்லாத காரணத்தால், நான் அப்படி நடந்து கொண்டேன் என்றும் சொல்லி , என்னுடைய நன் நடத்தைக்கு உத்தரவாதம் அளித்து, என்னை மீண்டும் அலுவலகத்தில் சேர்க்க வைத்தார்.

 

அதுமட்டுமின்றி, அதுவரையில் தொழிற்சாலைக்குள் இருந்த Warehouse ல் வேலை செய்து கொண்டிருந்த என்னை , அங்கிருந்தால் மீண்டும் கம்யூனிஸ்ட் அனுதாப தொழிலாளர்களுடன் சேர்ந்து எங்கே திசை மாறிவிடுவேனோ என்ற காரணத்தினால் , என்னை Marketing Office ல் அவரின் நேரடி மேற்பார்வையில் உள்ள ஒரு பணிக்கு , என்னை அமர்த்திக் கொண்டார். அதுமட்டுமல்ல தினசரி உணவு அருந்த உணவகத்திற்கோ மற்றும் கழிப்பரைக்கோ செல்லும் போது நான் அந்த தொழிலாளர்களிடம் தொடர்பு கொண்டுவிடுவேனோ என்று, என்னை கண்காணிக்க , நான் மேற்படி இடங்களுக்குச் செல்லும் போது, அவரின்  செயலாளரை என்னுடன் அனுப்புவார். அதே போல் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது, பேருந்துக்கு நிற்கும் பொழுது, நான் தவறான தொடர்பை தொடரக்கூடாது என்று, என்னை அவருடைய காரில் அழைத்துக் கொண்டு வந்து, Tailors Road பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுவார்.

 

இப்படி அலுவலக வாழ்க்கையில் மட்டுமல்லாமல், என்னுடைய முழு வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டவர். ஸ்ரீ.தெள்ளியஸிங்கரின் திருநக்ஷத்திரமான , கார்த்திகை ஸ்வாதி நக்ஷத்திரத்திலே பிறந்தவர். அதே கார்த்திகை திருநக்ஷத்திரத்திலே பிறந்தவர் எனது மூத்த மகள். ஒவ்வொரு ஆண்டும், அந்த நக்ஷத்திரத்தன்று ஸ்ரீ.தெள்ளியஸிங்கரை ஸேவித்து, உபயதாரராக பெருமாளுக்கு அன்று சிறப்பு அர்ச்சனை செய்து, தளிகையும் ஏற்பாடு செய்வார். அப்பொழுது மறக்காமல் என்னையும், என் குடும்பத்தினரையும் திருக்கோயிலுக்கு வரச் சொல்லுவார். அந்தக் காலங்களில் என்னுடைய மிகவும் வயதான பாட்டியார் திருக்கோயிலுக்குச் செல்லும் போது, அங்கு அவர் இருந்தால் அவரை விசாரித்து, அவருடைய செல்வாக்கினால் , பெருமாளை அருகில் சென்று ஸேவிக்க வைப்பார். எனது தாயார், சகோதரர்கள், மனைவி, மகள்கள் நலன் பற்றி என்னிடம் அடிக்கடி விசாரிப்பார். என் பாட்டியையும், தாயாரையும் நல்லபடிக்கு கவனித்துக் கொள்ளச் சொல்வார்.

 

அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் , ஸ்ரீ.தெள்ளியஸிங்கரிடம் அபார பத்தி கொண்ட அவர், பெருமாளின் ப்ரம்மோற்சவம் மற்றும் தவன உற்சவத்தின் போது , வயதாகிவிட்ட இந்த நிலையிலும் தவறாமல் வந்து கலந்து கொள்வார். அப்பொழுது திருக்கோயிலில் சந்திக்கும் என்னை நலமுடன் விசாரிப்பார்.

 

இப்படி முன் அறிமுகம் இல்லாத என்னை ,என் பணி ஈடுபாட்டின் காரணமாக மட்டும் இல்லாமல், என் மீது பாசமும் , நேசமும் கொண்டு, என்னை அவரின் உடன் பிறந்த சகோதரராகவே பாவித்து, என்னை நல்லபடிக்கு கவனித்து என் வாழ்வை வளப்படுத்திய அவரை நான் எப்படி மறக்க இயலும் ? அப்படி நான் மறந்திருந்தால் , ஒரு சாதாரண மனிதனாக வாழக்கூட லாயக்கற்றவனாகத்தான் இருந்திருப்பேன். என்றும் என் மனதில் இருக்கும் அவர் ,  என்றென்றும் நலமுடன் பல்லாண்டு, பல்லாண்டு  வாழ , நம் எம்பெருமான்களாகிய ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி , ஸ்ரீ.தெள்ளியஸிங்கர் ஸ்வாமியிடம் வேண்டிக் கொள்கிறேன்.

 

இந்த வருடம் ஸ்ரீ.தெள்ளியஸிங்கர் ப்ரம்மோற்சவத்தின் நான்காம் நாள் காலை, சூரியப் பிரபை புறப்பாட்டின் போது, கங்கை கொண்டான் மண்டபம் அருகில் பெருமாளை ஸேவிக்க அவர் வந்திருந்த போது , அடியேன் எடுத்த சில புகைப்படங்களை பதிவு செய்கிறேன்.

 

அடியேன் இராமானுச தாஸன்

நெ.வி.ராகவன்

No comments:

Post a Comment