Saturday, October 10, 2020

திருவாய் மொழியும் திருமாலின் திருவருளும்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் அடியேன் மகளின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது திருமாலின் திருவருளால் அடியேனுக்குக் கிடைத்த பாக்கியம் பற்றி கீழே விவரிக்கிறேன்.



அதற்கு முன்பு சில கருத்துக்கள் - அடியேன் நடுத்தர வயதில் இருந்த பொழுது, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தின் பெரியாழ்வாரின், திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் முதல் திருமொழி, இரண்டாம் பத்தின் 4,7, 8 மற்றும் ஐந்தாம் பத்தின் 4 ஆம் திருமொழி ,  திருப்பாவை, பெருமாள் திருமொழியில் 42 பாசுரங்கள் ( 3, 4, 8 மற்றும் 10 ஆம் திருமொழி ), ய திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலானாதிபிரான், கண்ணிந்நூண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழியில் 120 பாசுரங்கள் ( முதல் பத்தில் 1, 2, 3, 4, 5, 7, 9,  இரண்டாம் பத்தில் 2, 3 மற்றும் ஐந்தாம் பத்தில் 3, 7 , 8 ஆம் திருமொழி ),  இயற்பாவில் பெரிய திருமடல் தவிர்த்து மற்ற அனைத்து பாசுரங்கள்,
திருவாய் மொழியின் முதல் பத்து , கோயில் திருவாய் மொழி பாசுரங்கள் , இராமாநுச நூற்றந்தாதி என சுமார் 1350 பாசுரங்கள் வரை அனுசந்தித்து மனப்பாடம் செய்திருந்தேன்,



மேற்கொண்டு அடியேனுக்கு சந்தை எடுத்த வானமாமலையை சேர்ந்த ஒரு ஸ்வாமி ( அவர் திருநாமம் அடியேனுக்கு நினைவில் இல்லை. அவர் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்தவர். அவர் பரமபதித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன)  மூலமாக பல பாசுரங்களும், பின் அடியேன் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, வானமாமலை ஸ்ரீ.தெய்வநாயகன் ஸ்வாமி அவர்கள் சந்தை முறை பாசுரங்களை ஒலிநாடாவில் பதிவு செய்ததை மூலமாகக் கொண்டும் மேற்கண்ட பாசுரங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.



பின்னர் அடியேன் கவனம் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் பார்ப்பதில் சென்றுவிட்ட காரணத்தால் மேற்கொண்டு பாசுரங்களை மனப்பாடம் செய்யவில்லை. ஆனால் திருவல்லிக்கேணி ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலில் பல உற்சவங்களில் திருவாய்மொழி சாதிக்கப்படும் நிலையில் கோஷ்டிக்கு செல்லும் பொழுது, பாசுரங்களை அறியாத அடியேன் வெறுமனே கோழ்டியில் அமர்ந்திருந்தது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இருந்தாலும் மேற்கொண்டு பாசுரங்களை மனப்பாடம் செய்ய மனம் ஈடுபடவில்லை.


இந்த நிலையில் தான் அடியேன் 2013 ஆம் ஆண்டு மற்றொரு முறை அமெரிக்கா சென்றிருந்த பொழுது, அடியேன் மகளுக்கும் மற்றும் அங்குள்ள வேறு சிலருக்கும்   அடியேன் உறவினரும்    திருவிடவெந்தை தீர்த்தகாரருமான ஸ்ரீ.கோபி ஸ்வாமி அவர்கள் திருவாய்மொழி சந்தை வகுப்பு    ( அமெரிக்க நேரப்படி காலையிலும், பாரத தேஸத்து நேரப்படி மாலையிலும்) எடுத்துக் கொண்டிருந்தார். அடியேன் காலை தூங்கி எழுந்த பிறகு மாடியிலிருந்து கீழே வருவேன். அப்பொழுது அடியேன் மகள் சந்தை வகுப்பில் இருப்பார். ஒரு நாள் அடியேனிடம் " அப்பா, வெருமனேதானே இருக்கிறாய், நீயும் சந்தையில் கல்ந்து கொள்ளேன் " என்று சொன்னாள். அப்பொழுதுதான் அவரிடம் அடியேனுக்கு 60 வயதுக்கு மேல்  ஆகிவிட்டது, இனிமெல்லாம் அடியேனால் சந்தையில் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நினைவில் வைத்திருக்க இயலாது என்று சொன்னேன். அப்பொழுது அவர், " மனப்பாடம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, நாங்கள் கற்றுக் கொள்வதை கேட்டு, அந்த பாசுரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளேன் " என்று கூறினார்.

அடியேனும் அடுத்த நாள் அந்த சந்தையில் கலந்து கொண்டேன். அப்பொழுது ஸ்ரீ.கோபி ஸ்வாமிகள் , திருவாய்மொழியில் பத்தாம் பத்தின் முதல் திருமொழியான " தாள தாமரைத் , தடமணி வயல் திருமோகூர் " என்று தொடங்கும் பாசுரங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். திருவாய்மொழியில் வரிசையாக இல்லாமல் ஒவ்வொரு பத்தையும் மாற்றி மாற்றி சொல்லிக் கொடுப்பார்களாம். அதனால் அவர் முதல் பத்து முடித்து, பின் பத்தாம் பத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்,



திருவாய் மொழியின் பத்தாம் பத்து பாசுரங்களும், ஸ்ரீ.கோபி ஸ்வாமிகள் அவர்கள் சொல்லிக் கொடுத்த முறையும், அவரின் நாவின் இனிமையும் அடியேனை மிகவும் கவர்ந்தது. ஆதலால் அன்று முதல் தொடர்ந்து சந்தையில் கலந்து கொண்டு பாசுரங்களை கற்று மனப்பாடம் செய்து வந்தேன். மேலும் அப்பொழுதைக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்றமுறை வந்து ஓராண்டு இருந்த பொழுது பல பாசுரங்களை மனப்பாடம் செய்து முடித்தேன். ஆனால் மேலும் சுமார் 400 பாசுரங்கள் வரை திருவாய்மொழியில் மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. திருவல்லிக்கேணி வந்த பிறகு  கடந்த  ஒராண்டில் வெரும் 99 பாசுரங்கள் மட்டுமே மனனம் செய்யமுடிந்தது. ஆனால் அடியேன் மனதில் வெகு விரைவில் மீதமுள்ள பாசுரங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற எண்ணமிருந்ததே தவிர அதனை செயல்படுத்த முடியவில்லை.



அடியேன் மகள்களிடம் இனிமேல் அடியோங்களை வெளிநாடுகளுக்கு அழைக்காதீர்கள் . திருவல்லிக்கேணியில் இருந்து கொண்டு பெருமாளை நேரில் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். ஆனால் இந்த ஆண்டு , தவிர்க்க முடியாத காரணத்தால் ஆஸ்திரேலியா வர நேர்ந்தது,



இதன் காரணம் என்ன? எல்லாம் நம் எம்பெருமான் திருமால் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ.நரசிம்ம ஸ்வாமி திருவருளே. ஆம், இங்கு வந்ததிலிருந்து இன்று வரை கடந்த நான் கு மாதங்களில் திருவாய்மொழியின் 235 பாசுரங்களை அடியேன் மனப்பாடம் செய்துவிட்டேன். இன்னும் 66 பாசுரங்கள் மட்டுமே உள்ளன, அதிலும் ஊருக்கு திரும்புவதற்குள் எவ்வளவு மனப்பாடம் செய்ய முடியுமோ அவ்வளவையும் மனப்பாடம் செய்ய எம்பெருமான் அருள்புரிவான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அடியேனுக்கு உள்ளது.



" நீ சென்னையில் இருந்தால் , உன்னால் மிகக் குறைந்த அளவில் மட்டுமே மனப்பாடம் செய்யமுடியும் , அதனால் நீ உன் மகள் இல்லத்திற்கு சென்று, அங்கு நிறைய பாசுரங்களை மனப்பாடம் செய் " என்று திருவருளுடன் அடியேனை எம்பெருமான் இங்கு அனுப்பியதின் காரணம் அடியேனை உவகை கொள்ள வைக்கிறது.


எம்பெருமானின் திருவடித் தாள்களில் வணங்கி அடியேனுக்கு திருவாய்மொழியின் மொத்த பாசுரங்களையும் விரைவில் நிறைவு
செய்யும் பாக்கியத்தை அருளியமைக்கும், அதே போல் அடியேனை ஊக்குவித்த அடியேனின் மூத்த மகளின் எண்ணத்திற்கும், அடியேனை பாசுரங்களில் ஈடுபாடு கொள்ளும் வகையில் மிக அழகாகவும், நேர்த்தியாகவும், இனிமையான குரலிலும் கற்பித்த ஸ்ரீ.கோபி ஸ்வாமி அவர்களுக்கும்  அடியேன் மிக்க கடமைபட்டுள்ளேன்












No comments:

Post a Comment