அடியோங்கள் சென்ற 24.02.2017 வரை 102 திவ்யதேஸங்களை ஸேவித்திருந்தோம். கடந்த ஆண்டு பத்ரிநாத் யாத்திரையில் ஆறு வடநாட்டு திவ்யதேஸங்களை ஸேவித்தோம். இந்த ஆண்டு எப்படியும் குறைந்தது ஒரு வடநாட்டு திவ்ய தேஸமாவது, அதிலும் குறிப்பாக பஞ்சத்துவாரகை திவ்யதேஸத்தை ஸேவிக்க எண்ணம் கொண்டோம்.
பஞ்சத்துவாரகைகள் விவரம் - தாகுர் துவாரகா, துவாரகீஸ் ( கோமதி ) துவாரகா, பேட் துவாரகா, ஸ்ரீநாத் துவாரகா மற்றும் கங்க்ரோலி துவாரகா. இவற்றில் துவாரகீஸ் துவாரகா என்று அழைக்கப்படும் கோமதி துவாரகா ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் அருளப்பட்ட துவாரகையாகும். ஆனால் மற்றுமுள்ள நான்கு துவாரகைகளையும் ஸேவித்தால்தான் இந்த திவ்ய தேஸத்தை ஸேவித்தது பூர்த்தியாகும். ஆகவே பக்தர்கள் அனைவரும் பஞ்சத்துவாரகைகளையும் ஸேவித்து எம்பெருமான் ஸ்ரீ.கிருஷ்ணரை அனுபவிப்பார்கள்.
ஐந்து பஞ்சதுவாரகைகளில் மூன்று துவாரகைள் ( தாகுர் துவாரகா, கோமதி துவாரகா, பேட் துவாரகா ) குஜராத் மாநிலத்திலும், ஸ்ரீநாத் துவாரகாவும், கங்க்ரோலி துவாரகாவும் ராஜஸ்தான் மாநிலத்திலும் அமைந்துள்ளது. இரண்டு மாநிலங்களில் உள்ள பஞ்சதுவாரகைகளை ஸேவிப்பதற்கு குறைந்தது ஏழு நாள்களாவது தேவை. ஏனென்றால் முதல் மூன்று துவாரகைகள் 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ளதென்றாலும் , மற்ற இரண்டு துவாரகைகளை ஸேவிப்பதற்கு குறைந்தது 700 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். மேலும் பேட் துவாரகை ஸேவிக்க அரபிக் கடலுக்குள் சுமார் ஒரு அரை மணி நேரம் படகில் சென்று ஸேவிக்க வேண்டும். இதற்கே ஒரு அரைநாளுக்கு மேல் தேவைப்படும். வழியில் சில புராண திவ்ய ஸ்தலங்களையும் , ஜெய்பூர்நகரில் அமைந்துள்ள ஸ்வயம்வக்த க்ஷேத்திரமான புஷ்கர் , மஹாபாரத யுத்தம் நடைபெற்ற இடமான குருஷேத்திரம் ஆகிய ஸ்தலங்களையும் ஸேவிக்க வேண்டியிருப்பதால் மொத்தம் 16 நாள்கள் இந்த பஞ்சதுவாரகை யாத்திரையை நிறைவு செய்ய தேவைப்படும்.
இனி அடியோங்கள் பஞ்சத்துவாரகை யாத்திரை பற்றிய விவரம் - மொத்த யாத்திரையினையும் ஒரு சேர பதிவிட இயலாது என்ற காரணத்தினால் அடியோங்கள் ஸேவித்த ஒவ்வொரு ஸ்தலங்கள் பற்றி தொடர்ந்து பதிவிடுகிறோம் - :-
முதலில் மராட்டிய மாநிலம் ஷோலாப்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஸ்தலமான ஸ்ரீ.விட்டலபாண்டுரங்கண் திருக்கோயில் பற்றியும் , பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஸ்தலம் பற்றியும் அடியேன் மனதில் பட்டதை விவரிக்கிறேன்.
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து , மும்பை விரைவு ரயிலில் புறப்பட்டு, மறுநாள் காலை சுமார் 5.30 மணியளவில் மராட்டிய மாநிலம் ஷோலாப்புரை சென்றடைந்தோம். இந்த யாத்திரையை ஏற்பாடு செய்திருந்த ஸ்வாமிகள் மூலம் , அங்கிருந்து ஒரு பேருந்தில் பயனித்து சுமார் 80 கிலோ மீடடர் தொலைவில் உள்ள பண்டரிபூர் என்னும் ஊருக்கு சென்றோம், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கஜானன் மஹாராஜ் தர்மசாலா என்ற இடத்தில் தங்கினோம். காலையில் தீர்த்தாமாடிவிட்டு அங்கிருந்து ஒரு புராதன ஸ்தலமான விட்டல பாண்டுரங்கன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ.பாண்டுரங்கன் திருக்கோயிலுக்குச் சென்று , ஸ்ரீ.பாண்டுரங்கனை ஸேவித்தோம். திருமலையில் கூடும் கூட்டம் போல் பெருமளவில் பக்தர்கள் குழுமியிருந்தனர். பெருமாளை ஸேவித்துவிட்டு வருவதற்கு சுமார் மூன்று மணி நேரம் ஆனது.
மாலை அங்கு ஸ்ரீ.பாண்டுரங்கனின் மீது அபாரபக்தி கொண்டு அவரை நித்தம் ஸேவித்து வந்த சக்குபாய் என்னும் ஒரு பெண்மணிக்கு , அவர் செய்யாத தவறுக்காக , அரசு அவரை தண்டிக்க , அப்பொழுது எம்பெருமான் மீது கோபம் கொண்டு அந்த பெண்மணி , இனி பெருமாளை ஸேவிக்க மாட்டேன் என்று கூற, அப்பொழுது அவருக்கு காட்சியளித்த எம்பெருமான், சக்குபாயின் பக்தியினை வெளி உலகுக்குக் காட்டவே இப்படி நடக்கவைத்ததாகக் கூறி, அந்த ஊர் அரசனிடம், சக்குபாய் பற்றி நல்லவிதமாக எடுத்துச் சொல்லி அவரின் பக்தியை மெச்சி தன் திருவடிக்கீழ் சக்குபாயை சேர்த்துக் கொண்டார்.
சக்குபாய் தினசரி வெண்ணைகடைந்து , அந்த வெண்ணையினை ஸ்ரீ.பாண்டுரங்கனுக்கு நைவேத்தியம் செய்வாராம். அந்த வெண்ணை கடையும் உரல் ஒன்று சக்குபாய் சரணமடைந்த கோயிலுக்கு வெளியில் உள்ளது. அந்த உரலில் வெண்ணை கடைவது போல் உரலை ஆட்ட அங்கு வரும் பக்தர்கர் அனுமதிக்கப்படுகிறார்கள். அடியோங்களும், அடியோங்ககளுடன் இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் வெண்ணை கடைவது போல் உரலை அசைத்து மகிழ்ச்சி கொண்டோம்.
பஞ்சத்துவாரகை யாத்திரையின் இரண்டாம் கட்ட பதிவு.
24.02.2017 அன்று சென்னையிலிருந்து கிளம்பி, 25 ஆம் தேதி பண்டரிபுரத்தில் ஸ்ரீ.பாண்டுரங்கனை ஸேவித்த பிறகு, 26 ஆம் தேதி காலை அமாவாசை தர்ப்பணத்தை முடித்துவிட்டு, மதியம் உணவு அருந்திவிட்டு ,அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு நாசிக் நகரத்திற்கு அருகிலுள்ள பஞ்சவடி திவ்ய ஸ்தலத்திற்கு 26 ஆம் தேதி இரவு வந்தடைந்தோம்,.
மறுநாள் ( 27.02.2017 ) அன்று காலை புண்ணிய நதியான கோதாவரி நதியில் யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் தீர்த்தாமாடினோம். காலை உணவு அருந்திவிட்டு பின் பஞ்சத்துவாரகையில் பல இடங்களுக்கு சென்று சேவித்தோம். அது பற்றி :-
இந்த பஞ்சத்துவாரகை யாத்திரையின் பல பகுதிகள் பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர் வாழ்ந்து அருளிய பகுதிகள் என்ற நிலையில், இந்த பஞ்சவடி பகவான் ஸ்ரீ.ராமர் , ஸ்ரீ.சீதையுடனும், ஸ்ரீ.லக்ஷ்மணனுடனும் , தனது 14 ஆண்டு வனவாசத்தை கழிப்பதற்காக வந்து சேர்ந்த இடம்தான் இந்த பஞ்சவடியாகும்.
மராட்டிய மாநிலத்தின் மிக புண்ணிய பூமியாகக் கருதப்படும் இந்த பஞ்சவடியில்தான், ஸ்ரீ.ராமர் , ஒரு ஐந்து ஆலமரங்களுக்கு இடையில், தங்குவதற்கு ஒரு இடம் ஏற்படுத்திக் கொண்டு தங்கினார். இங்கு மாரிசன் முதல்முதலாக மானாக உருவெடுத்து வந்தான். அந்த மானை , ஸ்ரீ.சீதாபிராட்டியின் விருப்பத்திற்கேற்ப, ஸ்ரீ.ராமர் வேட்டையாடச் சென்றார், இன்றும் அந்த ஐந்து ஆலமரங்களை நாம் காணலாம்.
சூர்ப்பனகை வருகையின் போது ஸ்ரீ.லக்ஷ்மணனால் மூக்கறுப்பட்ட இடமும் இங்குதான்.
மானை வேட்டையாடச் சென்ற ஸ்ரீ.ராமர் திரும்பிவருவதற்கு மிகுந்த நேரமானதால், அவரைத் தேடி ஸ்ரீ.லக்ஷ்மணன், ஸ்ரீ.சீதையை குடிலில் தனியாக இருக்க வேண்டிய காரணத்தினால், லக்ஷ்மண் கோடுகளை இட்டு, ஸ்ரீ.சீதாதேவியை ஒரு குகையில் இருக்கச் செய்து அதைத் தாண்டி, அவர் வெளியில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஸ்ரீ.ராமரைத் தேடி புறப்பட்டு சென்றார். அப்பொழுது இராவணன் அங்கு வந்து ஸ்ரீ.சீதா தேவியிடம் பிட்சை எடுப்பது போல் நாடகமாடினான். இராவணனுக்கு பிட்சை இட , ஸ்ரீ.லக்ஷ்மணன் இட்ட கோட்டை தாண்டி வெளியில் வர , அவரை கவர்ந்து சென்றான்.
இங்குள்ள ஸ்ரீ.லக்ஷ்மி நாராயணன் ( வெள்ளை ராமர் ), திருக்கோயிலிலிருந்துதான், உலகப் பிரச்சிதி பெற்ற கும்பமேளா தொடக்கம் நடக்குமாம்.
பஞ்சவடியின் ஒரு பகுதியில் மிக புண்ணிய நதிகளான கபில நதியும், கோதாவரி நதியும் சங்கமமாகின்றன.
யாத்திரையில் கலந்து கொண்ட , அடியோங்கள் அனைவரும் பஞ்சவடியில் சேவித்த சில முக்கியமான இடங்கள் பற்றி :-
ஸ்ரீ.சீதா தேவி வாசம் செய்த , தளிகை செய்த ஒரு குகை.
ஸ்ரீ.ராமாயண காலத்தில் இருந்த அதே ஐந்து ஆலமரங்கள்.
ஸ்ரீ.சீதாப்பிராட்டியை பிரிந்த காரணத்தினால், மிகவும் வெள்ளையாக இருந்த ஸ்ரீ.ராமர் , கருப்புராமனாக மாறிவிட்ட இடம்.
ஸ்ரீ.ஆஞ்சநேயர் ஸன்னதி.
இராவணன் பிட்சை கேட்கும் இடம் மற்றும் அவன் ஏறி வந்த புஷ்பகரக விமானம்.
ஸ்ரீ.லக்ஷ்மணனால், சூர்ப்பனகை மூக்கறுப்பட்ட இடம்.
ஸ்ரீ.ராமரும், ஸ்ரீ.சீதாபிராட்டியும் சேர்ந்திருந்த இடமான பரணக்குடி ஸ்ரீ.அகஸ்தியர் திருக்கோயில்.
கபில நதியும், கோதாவரி நதியும் சங்கமிக்கும் இடம்.
பஞ்சத்துவாரகை யாத்திரையின் மூன்றாம் கட்ட பதிவு.
27.02.2017 அன்று மதியம் நாசிக்கிலிருந்து பேருந்தில் புறப்பட்டு , மாலை சுமார் 5.00 மணியளவில் மும்பை நகரம் வந்தடைந்து , அங்குள்ள மஹாலக்ஷ்மி திருக்கோயிலில் மஹாலக்ஷ்மி தாயாரை ஸேவித்துக் கொண்டு, பின் மும்பை மத்திய ரயில் நிலையம் வந்தோம் . அங்கே இரவு உணவை முடித்துக் கொண்டு, இரவு 11.50 மணி , வதோதரா விரைவு ரயிலில் புறப்பட்டு, மறுநாள் காலை வதோதரா ( பரோடா ) நகரம் வந்து சேர்ந்தோம். அங்குள்ள ஸ்ரீ.சாந்ராம் கோயிலை சார்ந்த ஒரு இடத்தில் தங்கினோம்.
இங்குதான் இந்த யாத்திரையின் முக்கிய ஸ்தலங்களான பஞ்சத்துவாரகையில் , அடியோங்கள் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்ற முதல் துவாரகையான தாகூர் துவாரகா உள்ளது.
தாகூர் துவாரகா திருக்கோயிலுக்குள் கைத்தொலைபேசியோ அல்லது புகைப்படக் கருவியோ எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத காரணத்தினால் , திருக்கோயிலின் உள் பகுதியில் புகைப்படம் எடுக்க இயலவில்லை. மிக அருமையான வேலைப்பாடுகள் அமைந்துள்ள இந்த தாகூர் துவாரகை திருக்கோயிலின் உள் கட்டமைப்பு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் ப்ட்டுள்ளது. இங்கு எம்பெருமானை ஸேவித்த பிறகு இத்திருக்கோயிலை , புகைப்படம் எடுத்தால் இங்கு இதுவரை வர இயலாதவர்களுக்கும், வயதான மூப்பின் காரணமாக இனி வர முடியாமல் இருப்பவர்களுக்கும் முகநூலில் பதிவு செய்து அதன் வழியாக இத்திருக்கோயிலை ஸேவித்து, களிக்கும் பாக்கியம் கிடைக்குமே என்று மனம் ஏங்கியது. என்ன செய்வது. இத்திருக்கோயிலின் சட்டங்களுக்கு உட்பட்டுத்தானே நாம் நடந்து கொள்ள வேண்டும்?
இத்திருக்கோயிலுக்கு வெளியில் எடுத்த சில புகைப்படங்களையும், வேறு சில கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட சில இடங்களில் எடுத்த புகைப்படங்களையும் அடியேன் முக நூலில் பதிவு செய்கிறேன்.
இந்த தாகூர் துவாரகாவில் எம்பெருமான் ஸ்ரீ.கிருஷ்ணர் கோயிலைத் தவிர
சரஸ்வதி தேவி, தத்ராத்ரேயர் , ருக்மணி தேவி திருக்கோயில்கள் உள்ளன.
இங்கு ஓடும் கோமதி சாகர் நதி மிகவும் புண்ணியம் வாய்ந்த நதியாகும்.
மேற்படி ஸ்தலங்களை ஸேவித்துக் கொண்டு அன்று மாலை பேருந்தில் புறப்பட்டு, பஞ்சத்துவாரகையின் , ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட மிக முக்கிய ஸ்தலமான துவாரகீஸ் திருக்கோயில் அமைந்துள்ள துவாரகாவை நோக்கி சென்றோம்.
பஞ்சத்துவாரகை யாத்திரையின் நான்காம் கட்ட பதிவு.- கோமதி துவாரகா எனப்படும் துவாரகீஸ் திவ்யதேஸத்தைப் பற்றிய சில குறிப்புகள் :-
28.02.2017 அன்று மாலை தாகூர் துவாரகையிலிருந்து பேருந்தில் புறப்பட்டு, அடுத்த முக்கிய திவ்ய தேஸமான கோமதி துவாரகை என்றும் அழைக்கப்பெரும் துவாரகீஸ் ஸ்தலஸ்தை மறுநாள் விடியற்காலை வந்தடைந்தோம்.
ஐந்து துவாரகைகளில் மிகவும் முக்கியமான இந்த கோமதி துவாரகை எம்பெருமானைத்தான் ஆழ்வார்கள் மங்களாஸாஸனம் செய்துள்ளதாக அடியோங்களிடம் , இந்த யாத்திரையை நடத்திய ஸ்வாமி அவர்கள் கூறினார்கள்.
ஸ்ரீ.நம்மாழ்வார் ஒரு பாசுரத்திலும், ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்திலும், ஸ்ரீ.பெரியாழ்வார் ஐந்து பாசுரங்களிலும், சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீ.ஆண்டாள் நான் கு பாசுரங்களிலும், ஆழ்வார்களில் கடை ஆழ்வாரான ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களிலும், ஆக ஐந்து ஆழ்வார்கள் மொத்தம் பதிமூன்று பாசுரங்களில் துவாரகாதிபதியான ஸ்ரீ.கிருஷ்ணனை மங்களாஸாஸனம் செய்துள்ளார்கள்.
ஸ்ரீ.நம்மாழ்வார்,
" அன்னை என் செய்யில் என்? * ஊர் என் சொல்லில் என் தோழிமீர் *ஏன்னை இனி உமக்காசை இல்லை * அகப்பட்டேன் * முன்னை அமரர் முதல்வன் * வண்துவராபதி மன்னன் * மணிவண்ணன் * வாசுதேவன் வலையுளே "
ஏன்று திருவாய்மொழியின் எட்டாம் பத்தின் மூன்றாம் திருமொழியின் இரண்டாம் பாசுரத்திலும்,
ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார்,
" சேயன் அணியன் * சிறியன் மிகப் பெரியன் * ஆயன் துவரைக்கோனாய் நின்ற மாயன் * அன்று ஓதிய வாக்கதனை கல்லார் * உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞனாமில் *
என்று நான்முகன் திருவந்தாதியின் எழுபத்து ஒன்றாம் பாசுரத்திலும் துவாரகை மன்னனை குறிப்பிடுகிறார்கள்.
இந்த கோமதி துவாரகையைத் தான் துவாரகா என்றும் ஊர் பேர் சொல்லி அழைக்கிறார்கள். விடியற்காலை இங்கு வந்தவுடன், இங்குள்ள அதிதிபவன் என்ற இடத்தில் தங்கினோம்.
இந்த துவாரகைக்கு கோமதி துவாரகா என்று பெயர் ஏற்படுவதற்குக் காரணம் மிக புண்ணிய நதிகளில் ஒன்றான கோமதி நதி நீண்ட தூரம் பயனித்து , அரபிக் கடலில் இங்குதான் சங்கமமாகின்றது. திருக்கோயிலை ஒட்டியே இந்த நதி ஓடி , கடலில் கலக்கிறது. ஒரு அற்புதமான திவ்ய தேஸத்தை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி கொண்டோம்.
காலையில் தங்கியிருந்த அதிதி பவனில் காப்பி அருந்திவிட்டு, கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தாமாடினோம். பின் அங்கேயே உடைகளை மாற்றிக் கொண்டு திருக்கோயிலுக்குச் சென்று எம்ம்பெருமானை ஸேவித்தோம், இங்கு ஆற்றை ஒட்டிய பகுதியில் உள்ள கடைகளில், எப்படி முக்திநாத்தின் சாளக்கிராமங்கள் கிடைக்கின்றனவோ , அதுபோல் இங்கும் சாளக்கிராமங்கள் கிடைக்கின்றன. முக்திநாத் சாளக்கிராமங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும்.. இங்கு கிடைக்கும் சாளக்கிராமங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன. அவைகளை மஹாலக்ஷ்மியாக இருக்கின்றன என்கிறார்கள்.
திருகோயிலுக்குள் எம்பெருமான் ஸ்ரீ.கிருஷ்ணன் ஸன்னதிக்குள் , ஒரு அகண்ட பாத்திரத்தில் ஸ்ரீ.கண்ணனின் திருவடியான, திருப்பாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ.கண்ணனின் திருவடியையும் தனியாக ஸேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஸன்னதியில் பெருமாளுக்கு முன் உள்ள அந்த அகண்ட பாத்திரத்தையும் புகைப்படம் எடுத்துள்ளேன்.
இந்த கோமதி துவாரகையில் , காலையும் , மாலையும் சேர்த்து ,மூன்று முறை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம். அதுவும் எம்பெருமான் அருளால் ,இரண்டு முறை மங்கள ஹாரத்தி நடைபெரும் போது ஸேவிக்கும் அற்புத பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.இந்தத் திருக்கோயிலில் ஸ்ரீ.தேவகிமாதா, ஸ்ரீ.ருக்மினி பிராட்டியார், ஸ்ரீ.மீரா, ஸ்ரீ.சத்யபாமா, ஸ்ரீ.ராதிகாதேவி, ஸ்ரீ.ஜாம்பவதி தேவி, ஸ்ரீ.பலராமர், ஸ்ரீ.பரத்யும்னன், ஸ்ரீ. அனிருத்தன் எழுந்தருளியிருக்கிறார்கள். மேலும் இங்கு ஸ்ரீ.ராமபிரானுக்கும் ஒரு திருக்கோயில் உள்ளது.
பஞ்சதுவாரகையில் முக்கிய ஸ்தலமான இந்த திவ்யதேஸத்தை ஸேவித்துக் கொண்டு , பின் அங்கிருந்து சுமார் ஒன்று இரண்டு மணி பேருந்து பயன தூரத்தில் , கடலுக்குள் உள்ள பேட் துவாரகை சென்றோம்.
பஞ்சத்துவாரகை யாத்திரையின் ஐந்தாம் கட்டப் பதிவு :-
கோமதி துவாரகை எம்பெருமானை ஸேவித்துக் கொண்டு பகல் இரண்டு மணியளவில் , அங்கிருந்து புறப்பட்டு, அரபிக் கடலுக்குள் சுமார் ஒரு அரைமணி நேர படகு பயனத்திற்குப் பிறகு பேட் துவாரகை சென்றடைந்தோம். இங்கும் திருக்கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாத காரணத்தினால் , படகில் சென்ற பொழுதும், பேட் துவாரகை திருக்கோயிலுக்குச் செல்லும் வழியிலும் சில புகைப்படங்கள் எடுத்தேன்.
படகில் திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் , எம்பெருமானை ஸேவிக்கும் முன்பு கண்ணுக்கும், மனதுக்கும் ரம்மியமான வகையில் சில காட்சிகளைக் கண்டோம். அடியோங்கள் பேட் துவாரகைக்கு கிளம்பும் முன் யாத்திரையின் நிர்வாகஸ்தர் அடியோங்களிடம் , கடலில் படகில் செல்லும் பொழுது அங்கு பறவைகள் கூட்டம் மொய்க்கும் என்றும், ஆகையால் அவற்றுக்கு பிஸ்கட் நிறைய வாங்கி சென்று , வானத்தின் மீது எறியும் பொழுது, கூட்டம் கூட்டமாக பறவைகள் , எறியும் பிஸ்கட்களை கீழே விழாமல் பறந்து கொண்டே, தங்கள் வாயில் கவ்விக் கொள்ளும் என்று சொன்னார். யாத்ரீகர்கள் அனைவரும் பிஸ்கட்களை வாங்கிச் சென்று படகில் உட்கார்ந்து கொண்டே வானத்தை நோக்கி வீசினோம். என்ன அழகு. ஒவ்வொரு பறவையும் அப்படி வீசின பிஸ்களை பறந்து கொண்டே வாயில் கவ்விக் கொண்டு சென்றன. ஒரு சில பிஸ்கட்கள் மட்டுமே கீழே விழுந்தன. அதற்கும் காரணம் அந்த பிஸ்கட்களை பிடிக்க முயலும் பறவைகளின் போட்டிகளே. அந்தக் காட்சியானது மிகவும் அழகாக இருந்தது.
அது போல் பேட் துவாரகையில் பகவான் ஸ்ரீ.கிருஷ்ணரை ஸேவித்துவிட்டு, மீண்டும் படகுக்குத் திரும்பும் போது, மாலை நேரம் ஆனபடியால் , சூரியன் மறையும் காட்சி மிக அற்புதமாக இருந்தது. அதுவும் கடலிலிருந்து பார்க்கும் போது சூரியன் சிறிது சிறிதாக கீழே இறங்கிக் கொண்டே வானத்திலிருந்து மறையும் காட்சியை பார்க்கும் பொழுது மிக ஆனந்தமாக இருந்தது.
மீண்டும் இரவு கோமதி துவாரகாவிற்கு வந்து மேலும் ஒரு முறை திருக்கோவிலுக்குச் சென்று பெருமாளை நன்கு ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.
மறுநாள் விடியற்காலை கோமதி துவாரகாவிலிருந்து புறப்பட்டு , பேருந்தில் புறப்பட்டு, சுதாமா திருக்கோயில், ஸ்ரீ.கிருஷ்ண ப்ரபாச தீர்த்தம் மற்றும் பல இடங்களுக்குச் சென்றோம். அதனைப் பற்றி விரைவில் பதிவிடுகின்றேன்.
. துர்வாச முனிவரும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சில நிபந்தனை விதிக்கிறார். அவரை ஒரு
பஞ்சத்துவாரகை யாத்திரையின் ஆறாம் கட்டப் பதிவு :-
பேட் துவாரகை பற்றி முன்பே பதிவிட்டிருந்தேன். அந்த பேட் துவாரகையின் சில சிறப்புகள் :-
பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணரும், ஸ்ரீ.ருக்மணி தேவியும், துர்வாச முனிவரை தங்கள் திருமாளிகைக்கு சாப்பிட அழைத்தனர். அவர்களுடன் வருவதற்கு ஒப்புக்கொண்ட துர்வாச முனிவர் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அவரை ஒரு ரதத்தில் அமர வைத்து ஸ்ரீ.க்ருஷ்ணரும், ஸ்ரீ.ருக்மணிதேவியும் அந்த ரதத்தை இழுத்துச் செல்ல வேண்டும் என்றும் , வழியில் எங்கும் நிற்கக் கூடாது என்றும் கூறுகிறார். அவரின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, ரதத்தை இழுத்துச் செல்கின்றனர்.
வழியில் ஸ்ரீ.ருக்மணிதேவிக்கு தீர்த்த தாகம் எடுக்க, வழியில் எங்கும் தீர்த்தம் கிடைக்கவில்லை. அதனால் பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர் , தம் கால் கட்டை விரல் மூலம் பூமியை அழுத்தி, பூமியிலிருந்து நீர் வரவழைக்கிறார். ஸ்ரீ.ருக்மணிதேவி, ரதத்தை சற்று நிறுத்தி, தாகத்தை தீர்த்துக் கொள்ள நீர் அருந்துகிறார். இதனால் கோபமுற்ற துர்வாச முனிவர் ஸ்ரீ.க்ருஷ்ணரும், ஸ்ரீ,ருக்மணிதேவியும் 12 ஆண்டுகள் பிரிந்து வாழ வேண்டுமென்று சாபம் இடுகிறார்.
துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து விடுபட என்ன செய்வது என்று யோசித்து, அவரை திருப்த்தி படுத்தும் வண்ணம் அவருக்கு பழங்களைக் கொடுத்து, பணிவிடைகள் செய்து நன் கு உபசரிக்கிறார், ருக்மணிதேவி . அதனால் மனம் குளிர்ந்த துர்வாசர் தாம் இட்ட சாபத்தை நீக்குகிறார். பின் ஸ்ரீ.க்ருஷ்ணரும், ஸ்ரீ.ருக்மணிதேவியும் சேர்ந்து வாழ்கிறார்கள்.
இந்த பேட்துவாரகையில்தான் ஸ்ரீ.ருக்மணிதேவி, ஸ்ரீ.க்ருஷ்ணரின் சிலா ரூபத்தை , தானே ப்ரதிஷ்டை செய்கிறார். இந்த பேட் துவாரகையில்தான் பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணரிடம் அபார பக்தி கொண்டிருந்த ,பக்தமீரா தானே அங்கு வந்து ஸ்ரீ.க்ருஷ்ணரிடம் அடைக்கலமாகிறார். இந்த பேட் துவாரகையில்தான் குசேலர் , ஸ்ரீ.க்ருஷ்ணருக்கு அவல் கொடுக்கிறார். சத்யபாமா தினமும் இங்கு க்ருஷ்ணருக்கு மங்கள ஹாரத்தி எடுப்பாராம்.
இந்த பேட் துவாரகை யாத்திரையை முடித்துக் கொண்டு அடுத்த நாள் (02.03.2017) அன்று காலை சுதாமா கோயிலுக்குச் சென்றோம். அந்த சுதாம கோயிலில் எடுத்த சில புகைப்படங்களை இங்கு பதிவிடுகிறேன்.
இங்கு அருகிலுள்ள சோம்நாத் திருக்கோயிலுக்கும் யாத்திரை நிர்வாகஸ்தர் பலரை அழைதுதுச் சென்றார். அங்கு வெளியில் எடுத்த படங்களையும் இத்துடன் பதிவிடுகின்றேன்.
பஞ்சத்துவாரகை யாத்திரையின் ஏழாம் கட்டப் பதிவு - ப்ரபாச தீர்த்தம் :-
பஞ்சத் துவாரகை யாத்திரயில் , தாகுர் துவாரகா, கோமதி ( த்வாரகீஸ் ) துவாரகா, பேட் துவாரகா மற்றும் பண்டரிபூர், பஞ்சவடி போன்ற புண்ணிய ஸ்தலங்களைப் பற்றியும் முன்பே பதிவிட்டிருந்தேன்.
பஞ்சத் துவாரகையின் அடுத்து ஸேவித்த இரண்டு துவாரகைகளான ஸ்ரீநாத் துவாரகா மற்றும் கங்க்ரோலி துவாரகாவுடன் , இடையில் ஸேவித்த ஸ்ரீக்ருஷ்ண ப்ரபாச தீர்த்தம் மற்றும் குஜாராத்தில் அமைந்துள்ள சில திருக்கோயில்கள் பற்றியும் ஒவ்வொன்றாக மேற் கொண்டு பதிவிடுகிறேன்.
அந்த ப்ராபச தீர்த்தம் பற்றி :-
பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர் பிறந்து வாழ்ந்து பல சாதனைகள் புரிந்த மதுரா, விருந்தாவனம், கோகுலம், கோவர்த்தனம் பற்றி பலருக்கும் நன்கு தெரிந்திருக்கும். மேலும் இந்த திருத்தலங்களைப் பற்றி கடந்த ஆண்டு புகைப்படங்கள் அடியேன் பதிவிட்டிருந்தேன்.
இந்த பஞ்சத் துவாரகை யாத்திரையின் போது, அடியோங்கள் சென்று ஸேவித்த இடங்களில் ஒன்று க்ருஷ்ண ப்ரபாச தீர்த்தம் என்ற ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இது பஞ்சத் துவாரகையில் ஒன்றாக இல்லையென்றாலும் , முக்தி துவாரகா என்று அழைக்கப்படுகிறது.
இந்த ப்ரபாச தீர்த்தத்தில் தான் பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதம் எழுந்தருளினார். அவருக்கு ஈமக் கிரியைகள் செய்யப்பட்ட இடமும், அவரின் திருப்பாதம் படிந்த இடமும் இன்றும் இந்த இடத்தில் இருக்கிறது. ஸ்ரீ.க்ருஷ்ணர் இங்கு வந்ததற்குக் காரணம், தனது தமையானார் ஸ்ரீ.பலராமர் இங்கு வந்து பரமபதம் அடைந்த இடத்தை காணத்தான்.
ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதிப்பதற்கு முன்பே இங்கு எழுந்தருளியிருந்த ஸ்ரீ.பலராமர், ஆதிசேஷன் ரூபமாகி அங்கிருந்த ஒரு சிறிய குகையில் உள்ள த்வாரம் வழியாக பூமிக்குள் மறைந்து பரமபதம் எழுந்தருளினார்.
ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதித்த இந்த இடத்தில் தான் ஹிரண்ய நதி , கபில நதி மற்றும் சரஸ்வதி நதி ஆகியவை சங்கமமாகி, இதுவும் ஒரு " திருவேணி சங்கமம் " என்று அழைக்கப்படுகிறது.
அடுத்த பதிவில் ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதிப்பதற்கு காரணமாயிருந்த இடத்தின் புகைப்படங்களையும் , அதைப்பற்றிய ஒரு சிறிய செய்தியினையும் பதிவிடுகிறேன்.
பஞ்சத்துவாரகை யாத்திரையின் எட்டாம் கட்டப் பதிவு :-
பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணரின் சகோதரர் ஸ்ரீ.பலராமர் பரமதித்த இடமான ப்ரபாச தீர்த்த இடத்திற்கு . ஸ்ரீ.க்ருஷ்ணர் வந்து , ஒரு மரத்தின் பக்கத்தில் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார். அவர் ஒரு காலை மடக்கி கொண்டு அமர்ந்த நிலையில் இருந்தார்.
அப்பொழுது அந்த பக்கமாக வந்த ஜாரா என்ற வேடன் ஒருவன், அந்த மரத்தின் பக்கம் வந்த பொழுது , ஸ்ரீ.க்ருஷ்ணரின் திருப்பாதம் அவனுக்கு ஒரு மான் போல் தெரிந்ததாம். அதனால் அதனை வேட்டையாட ஒரு அம்பை எய்தானாம். அந்த அம்பு பட்டு, பகவான் ஸ்ரீ.க்ருஷ்ணர் பரமபதித்து வைகுண்டம் எழுந்தருளினாராம்.
அந்த ஜாரா என்கிற வேடன் யார் என்றால் , முற்பிறவியில் இராமாயண காலத்தில் வாலியாக வாழ்ந்தவனாம். அப்பொழுது ஸ்ரீ.ராமர் தனது எதிரியாக இல்லாத நிலையிலும் , மறைந்திருந்து அம்பை எய்து, வாலியை கொன்ற காரணத்தினால் , ஸ்ரீ. ராமர் மனம் நொந்து விட்டாராம்.
அதனால் அவரின் அடுத்த அவதாரமான ஸ்ரீ.க்ருஷ்ணாவதாரத்தில் , தன் முந்தைய அவதாரத்தில் தான் செய்த தவறை சரி செய்யவும், தன்னை பழி தீர்த்துக் கொள்ளும் விதமாகவும் வாலியாகிய ஜாராவின் அம்பினால் தான் பரமபதிக்க வழி வகை செய்து கொடுத்து, மேலும் மஹாபாரத யுத்தத்தில் துரியோதனாதிகளை கொல்ல , பஞ்ச பாண்டவர்களுக்கு துணை நின்ற காரணத்தினால் துரியோதனாதிகளின் தாயாரான காந்தாரியின் சாபத்தை நிறைவேற்ற அந்த ஜாராவை வரவழைத்தாராம்.
ஏன் காந்தாரியின் சாபத்தை ஸ்ரீக்ருஷ்ணர் ஏற்றுக் கொண்டார் என்றால், அவள் மஹாவிஷ்ணுவின் மீது அபார பத்தி கொண்டவளாம். அதனால் தான் அவளின் சாபத்தை ஏற்று , ஜாராவின் மூலம் அம்பெய்த வைத்து, தன் க்ருஷ்ணாவதாரத்தை முடித்துக் கொண்டாராம்.
பஞ்சத்துவாரகை யாத்திரையின் ஒன்பதாம் கட்டப் பதிவு : -
பஞ்சத்துவாரகை யாத்திரையின் முடிவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மிர் நகரத்தில் உள்ள புஷ்கரை ஸேவிக்கச் சென்றோம்.
புஷ்கரில் என்ன விசேஷம் ?
எம்பெருமான் ஸ்ரீமந்.நாராயணன் ஸ்வயம்புவாய் எழுந்தருளிய ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் மொத்தம் எட்டு. அவற்றி நான்கு தென் பாரதத்திலும், மற்றும் ஒரு நான்கு வட பாரதத்திலும் உள்ளது. இந்த எட்டு ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்களில் , தென் பாரதத்தில் மூன்றும், வட பாரதத்தில் மூன்றும் ஆழ்வார்களாள் மங்களா ஸாஸனம் அருளப்பட்ட திவ்ய தேஸங்களாகும். மீதமுள்ள இரண்டும் திவ்ய ஸ்தலங்களாகும் அவை தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீமுஷ்ணமும், ராஜஸ்தானில் உள்ள புஷ்கரும் ஆகும்.
தென் பாரதத்தில் உள்ள ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் :-
ஸ்ரீ.ரங்கநாதர் பள்ளிகொண்டு ஸேவை ஸாதிக்கும் ஸ்ரீரங்கம் .
ஸ்ரீ.வெங்கடேசர் நின்ற வண்ணம் ஸேவை ஸாதிக்கும் திருமலை.
ஸ்ரீ.தெய்வநாயகன் தரிசனம் அருளும் வானமாமலை.
ஸ்ரீ.பூவராஹப் பெருமாள் ஸேவை ஸாதிக்கும் ஸ்ரீமுஷ்ணம்.
மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் முதல் மூன்றும் ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்யப்பெற்ற திவ்ய தேஸங்கள் ஆகும். ஸ்ரீ.முஷ்ணம் ஒரு புராண திவ்ய ஸ்தலமாகும்.
வட பாரதத்தில் உள்ள ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் :-
ஸ்ரீ.பத்ரிநாராயணன் ஸேவை ஸாதிக்கும் ஸ்ரீபத்ரி.
ஸ்ரீ.சாளக்கிராமர் ஸேவை ஸாதிக்கும் முக்திநாத்.
ஸ்ரீ.வனராஜனாக ஸேவை ஸாதிக்கும் நைமிச்சாரண்யம் .
ஸ்ரீ.புஷ்கரணியாக ஸேவை ஸாதிக்கும் புஷ்கர்.
இதிலும் மேலே குறிப்பிடுள்ளவற்றில் முதல் மூன்றும் ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்யப் பெற்றதாகும். ஸ்ரீ.புஷ்கர் ஒரு புராண திவ்ய ஸ்தலமாகும்.
புஷ்கரில் உள்ள புஷ்கரணியில் நீராக பெருமாள் தோன்றிய ஸ்வயம்வக்த க்ஷேத்திரம் .
இந்த புஷ்கருக்கு , புஷ்கரம் என்று பெயர்வரக் காரணம் , ஒரு சமயம் பிரம்மா , யாகம் செய்ய வேண்டி ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் அவரின் கையில் இருந்த தாமரை கீழே விழுந்ததாம் . பிரம்மாவுக்கு அந்த இடம்தான் யாகம் செய்வதற்கு ஏற்ற இடம் என்ற எண்ணம் ஏற்பட, தாமரை என்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் புஷ்கர் என்ற பெயர் காரணமாக அந்த இடம் புஷ்கர் என்று அழைக்கப்பட்டதாம்.
இங்கு தான் எம்பெருமான் ஸ்ரீ.மஹாவிஷ்ணு, நீர் நிலையாக தானே அவதரித்தார். எம்பெருமான் எழுந்தருளியுள்ள இந்த நீர் நிலை மிகவும் புண்ணியம் வாய்ந்தது. இந்த புஷ்கரணியிலே தீர்த்தாமாடுவது, பத்தர்களுக்கெல்லாம் மிகவும் பாக்கியமான ஒன்றாகும். இந்த புஷ்கரணியிலே 52 படித்துறைகள் உள்ளனவாம். ஆனால் அடியோங்கள் இரண்டு படித்துறை வழியாக மட்டுமே இங்கு சென்று , ஒரு படித்துறையில் தீர்த்தாமாடியும். மற்றொன்றை தரிசித்தும் வந்தோம். சாதாரண நாள்களில் ஆயிரக் கணக்கில் வரும் பத்தர்கள் , புஷ்கரின் பௌர்ணமி அன்று மிக மிக அதிக அளவில் வந்து தீர்த்தாமாடுவார்களாம்.
இந்த புஷ்கரிலே பல திருக்கோயில்கள் உள்ளன. நேரமின்மை காரணமாகவும், அடியோங்களுக்கு இருந்த அவகாசம் மிகக் குறைந்த அளவே இருந்த காரணத்தாலும் சில திருக்கோயில்களை மட்டுமே ஸேவிக்க முடிந்தது.
ப்ரம்மா , பூவுலகில் வந்து யாகம் செய்த இடம் இது என்பதால் ,உலகிலேயே ப்ரம்மாவிற்கு தனிக் கோயில் உள்ள முக்கியமான ஒரே இடம் இந்த புஷ்கர்தான். இங்குதான் ப்ரம்மா திருக்கோயிலின் , ப்ரம்மவின் பத்தினி சாவித்திரி தேவியும் காட்சி கொடுக்கிறார். இதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதாவது, யாகம் செய்ய ப்ரம்மா தயாராக இருந்த நிலையில், அவரது பத்தினியான ஸ்ரீ.சாவித்திரி தேவி அங்கு வருவதற்கு இயலவில்லையாம். அதனால் உடனே யாகம் நடத்த விரும்பிய ப்ரம்மா அங்குள்ள வேறு ஒரு பெண்மணியாகிய காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு, யாகத்தை நடத்தி முடித்தாராம். அதனால் ப்ரம்மா மீது கோபம் கொண்ட சாவித்திரி, ப்ரம்மாவை இந்த ஒரு இடத்தில்தான் பத்தர்கள் ஸேவிக்க இயலும் என்றும் , வேறு எங்கும் ஸேவிக்க இயலாது என்றும் சாபமிட்டாராம். அந்த சாபத்தினால், ப்ரம்மாவிற்கு , புராண , ஆதி காலங்களில் எங்கும் திருக்கோயில் இல்லை. புஷ்கரில் உள்ள இந்த திருக்கோயிலில் தான் ப்ரம்மா பத்தர்களுக்கு ஸ்ரீ.சாவித்திரியுடனும், ஸ்ரீ.காயத்ரியுடனும் சேர்ந்து காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறார்.
அடியோங்கள் ஸேவித்த திருக்கோயில்கள் , ஸ்ரீவராஹர் திருக்கோயில், ஸ்ரீ.வைகுந்தநாதர் திருக்கோயில் மற்றும் மேலே சொன்ன ஸ்ரீ.ப்ரம்மா திருக்கோயில் மட்டுமே. அடியோங்கள் சென்றபொழுது, ஸ்ரீ.வைகுந்தநாதர் திருக்கோயிலில், தமிழக வழக்கப்படி, திருவாராதணம் முடிந்து, பிரசாத வினியோகம் ஆனது. எம்பெருமான் அருளால் அங்கு ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெற்றோம்.
பஞ்சத் துவாரககளில் கடைசியாக ஸேவித்த இரண்டு துவாரகைகளான ஸ்ரீநாத் துவாரகா மற்றும் கங்க்ரோலி துவாரகாவில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதாலும், அங்கு கேமராவையோ, கைப்பேசியை கொண்டு சென்றாலோ அதை பாதுகாப்பாக வைப்பதற்கு சரியான இடம் இல்லை என்பதால் அங்கெல்லாம் புகைப்படங்கள் அடியேனால் எடுக்க இயலவில்லை.
இனி அடுத்து புது தில்லிக்கு அருகிலுள்ள குருக்ஷேத்திரம் பற்றிய பதிவு தொடரும்.