பொய்கை ஆழ்வார், வையத்தை தகளியாகக் கொண்டும், பூதத்தாழ்வார், அன்பைத் தகளியாகக் கொண்டும் விளக்கேற்ற, அந்த விளக்கொளியிலே, பேயாழ்வாருக்கு உடன் காட்சி அளித்த எம்பெருமானை, பேயாழ்வார் -
" திருக்கண்டேன் * பொன்மேனி கண்டேன் * திகழும்
அருக் கண் அணி நிறமும் கண்டேன் * செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் * புரிசங்கம் கைக்கண்டேன் *
என்னாழி வண்ணன் பால் இன்று " என்று அருளிச் செய்தார்.
இப்படியாக ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற எம்பெருமான் , திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே ஸ்ரீ.பார்த்தசாரதியாக எழுந்தருளியிருக்கிறான். அந்த எம்பெருமான் இன்று ( 01.08.2015 ) ஜ்யேஷ்டாபிஷேகம் கண்டருளினார்.
அன்று எப்படி ஆழ்வார்களுக்கு காட்சியளித்தானோ, அந்தக் கரிய மேனியன் ,அதே போன்று, இன்று எம்பெருமான் அனைவருக்கும் அளித்த காட்சியானது மெய் சிலிர்க்க வைக்கிறது.
" முடிச் சோதியாய் * உனது முகச் சோதி மலர்ந்ததுவோ ? * அடிச்சோதி நீ நின்ற * தாமரையாய் அலர்ந்ததுவோ ?*
என்ற நம்மாழ்வாரின் வாக்குப்படி, ஸ்ரீ.பார்த்தசாரதி, தன் சுய ரூபத்திலே இன்று , அவன் திருமுக மண்டலமும், திருவடி தரிசனமும் அளித்தது வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
" எழுமைக்கும் எனதாவிக்கு * இன்னமுதத்தினை எனதாருயிர் *கெழுமிய கதிர்ச் சோதியை *மணிவண்ணனைக் குடக் கூத்தனை*
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் * கன்னற் கனியினை *
தொழுமின் தூய மனத்தராய் * இறையும் நில்லா துயரங்களே *"
ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த மேற்படி பாசுரத்தின் படி, தூய மனத்துடன் , நம் எம்பெருமானின் திருமேனி அழகையும் , அவன் சௌலப்யத்தையும் நாம் ஸேவித்தோமானால் , நம் எல்லாத் துயரங்களும் நம்மை விட்டு அகல்வதோடல்லாமல் , நம்மை என்றுமே நெருங்காது.
வருடம் தோறும், ஆடி மாதத்திலே பௌர்ணமி தினத்தன்று, கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் திருவல்லிக்கேணி எம்பெருமான் அடுத்த நாள் ஜ்யேஷ்டாபிஷேகம் கண்டருளுகின்றார்.
இந்த நன்னாளில் மட்டும், வருடத்தில் ஒரே ஒரு நாள் நம் எம்பெருமானை, அவனுடைய அசல் ஸ்வரூபத்திலே தரிசிக்க முடியும். கவசங்கள் எல்லாம் களையப்பட்டு, ஸ்ரீ.பார்த்தசாரதியும் , உபயநாச்சிமார்களும், சுயமான திருமேனியிலே திருமஞ்சனம் கண்டருளுகின்றனர்.
எந்த விதமான சாற்றுப்படியிலும் நம்மை அப்படியே ஆட்கொள்ளும் ஸ்ரீ.பார்த்தசாரதி , பல உற்சவங்களில் பல, பல அலங்காரங்களுடன் காட்சி அளித்தாலும், இந்த சுயமான திருமேனியில் அவனை ஸேவிப்பது என்பதே பெரும் பாக்கியமாக ஸ்ரீ.வைஷ்ணவ அடியார்களால் கொண்டாடப்படுகிறது.அவன் திருமேனியில் உள்ள வடுக்களையும், குறிப்பாக அவனின் இடுப்பின் ஒரு தழும்பு காணப்பெருகிறது. இது, கண்ணன் , சிறு குழந்தையாக, ஆயர்பாடியில் விளையாட்டாக விஷமங்கள் செய்த காரணத்தினால் , அவனுடைய இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி , அதனின் மறுபகுதியை உரலில் இணைத்து விடுகிறாள் யசோதை. அந்த கயிற்றின் அழுத்தத்தின் காரணமாக, வடு அப்படியே அவன் உடம்பில் தங்கிய காரணத்தினால் , தாமோதரன் என்ற திருநாமம் கொண்டு அழைக்கபடலானான், கண்ணன்.
அந்த தாமோதரனாகிய, கண்ணனே இங்கு ஸ்ரீ.பார்த்தசாரதியாக எழுந்தருளியிருக்கிறான். எனவே அவன் திருமேனியில் அப்படியே பாங்காக அந்த கயிற்றின் வடுவானது அமைந்துள்ளது. இதனை ஸேவிக்கக் கூடிய பாக்கியம் இன்று திருக்கோயிலுக்கு வரும் அத்துணை அடியார்களுக்கும் கிடைக்கப் பெருகிறது. வருடம் முழுவதும் நமக்குக் காட்சியளிக்கும் எம்பெருமானின் இன்றைய காட்சியானது, இதுவரையில் தினசரி ஸேவித்து வந்த அதே பார்த்தன் தானா இவன் என்ற எண்ணம் , நம் மனதினுள் எழும் அளவுக்கு மிக வித்தியாசமாகக் காட்சி அளிக்கின்றான், நம் அழகனாகிய ஸ்ரீ.பார்த்தசாரதி.
இன்று காலை 11,00 மணியளவில் தொடங்கிய ஜ்யேஷ்டாபிஷேகம் முடிய சுமார் 12.30 மணி ஆகிவிட்டது. குடம் குடமாய் பாலும், தயிரும், தேனும், இளநீரும் கொண்டு திருமஞ்சனம் . ஒவ்வொரு திருமஞ்சனத்தின் போதும் , அற்புதமான ஸேவை. பிறகு தட்டுத் திருமஞ்சனம்.
பிறகு பக்தர்கள் அனைவருக்கும், ஸ்ரீ.பார்த்தசாரதியின் திருமேனியிலே சாற்றப்பட்டிருந்த மஞ்சள் காப்பும், திருத்துளாயும், எம்பெருமான் திருமஞ்சனம் கண்டருளிய தீர்தமும் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அடியார்கள் அனைவரும் எம்பெருமானின் அசல் அர்ச்சாவதார ரூபத்தை அருகில் சென்று ஸேவித்து அனுபவிக்கும் பாக்கியம் அனைவருக்கும் அருளப்பட்டது.
ஆக மொத்தத்திலே இன்றைய தினம் , அனவருக்கும் ஒரு நன்னாளாக, பொன்னாளாக அமைந்துவிட்டது அனைவரின் பாக்கியம்.